தனிக் கட்சிக்கு தயாராகும் சரத்குமார்?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

எனக்கு மத்திய அமைச்சர் பதவி தராதது எனது ரசிகர்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் பேசுவேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

திமுகவில் சேர்ந்த புதிதில் சரத்குமாருக்கு நல்ல மரியாதை இருந்தது. ஆனால் போகப் போக அவருக்குரிய முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. இப்போது சுத்தமாக இல்லை.

இதை உணர்ந்த சரத்குமாரும் திமக கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை, போராட்டங்களுக்குப் போவதில்லை. பட்டும் படாமலும் இருந்து வருகிறார்.

Sarathkumar with Nayanthara

திருச்சி மாநாட்டுக்கே முதலில் வர மறுத்துவிட்டு கடைசியில் தான் வந்தார். இந் நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் பிரசாரம் செய்ய சரத்குமாருக்கு அழைப்பு இல்லை என்று பேச்சு எழுந்தது. இதனால் சரத்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

தனது பலத்தை திமுகவுக்கு காட்ட வேண்டும் என்று முடிவெடுத்த குமார் தூத்துக்குடியில், தனது ரசிகர் மன்றத்தின் 15வது ஆண்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தினார்.

மாநாட்டையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து ரசிகர்கள் அசத்தியிருந்தனர். ரசிகர் மன்ற மாநாடு என்று கூறப்பட்டாலும் வந்திருந்தவர்களில் 99 சதவீதம் பேர் நாடார்சமுதாயத்தினர்தான்.

மேடை முழுவதும் ரசிகர் மன்றப் பிரநிதிகளும், நாடார் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நிறைந்திருந்தனர். ஒப்புக்காக, தூத்துக்குடி மாவட்ட திமக செயலாளர் பெரியசாமியும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதில் சரத்குமார் பேசுகையில், நான் அரசியல் புரட்சி செய்யத்தான் இங்கே வந்திருப்பதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் நான் அதற்காக வரவில்லை. இது மன்ற மாநாடு, நலத் திட்ட உதவிகளை வழங்க வந்துள்ளேன். உங்களைப் பார்க்க வந்துள்ளேன்.

உங்கள் முன்பு நிற்கும் அருகதை எனக்கு உள்ளதா என்று தெரியவில்லை. மிகச் சிறப்பான விழாவாக இது அமைந்து விட்டது. என் உயிர் மூச்சு இருக்கும் வரை தூத்துக்குடி ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை மறக்க மாட்டேன்.

எம்.ஜி.ஆர். என்னை மிகவும் கவர்ந்தவர். அவரால் ஈர்க்கப்பட்டுத்தான் நான் சினிமாவுக்கே வந்தேன். எனது விடாமுயற்சியால்தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது.

வெறும் 500 ரூபாய் சம்பளம் பெற்ற நான் இப்போது பல கோடி ரூபாய் சம்பளம் பெறும் அளவுக்கு என்னை உயர்த்தியவர்கள் ரசிகர்கள்.

புலன் விசாரணையில் வில்லனாக அறிமுகமாகிய நான் இப்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளேன். இதோ, எனது 100வது படமான தலைமகன் வெளிவரப் போகிறது. வாள் முனையை விட பேனா முனைக்குத்தான் அதிக சக்தி என்பதை

வெளிக்காட்டும் படம் இது. (இதில் குமார் பத்திரிக்கை ஆசிரியராக நடிக்கிறாராம்)நான் அரசியல் பேசக் கூடாது. ஆனால் நாளைய சமுதாயத்தை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நமது ரசிகர்கள் யோசிக்க வேண்டும். வெறும் நற்பணிகளால் மட்டும் சமுதாயத்தை வளர்த்து விட முடியாது.

ரத்ததானம், முதியோர்களுக்கு உதவுதல் என பல பணிகள் நம் முன் உள்ளது. நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன். இருப்பினும் (நாடார்) சமுதாய உணர்வு எனக்கும் உண்டு. நம் சரத்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் சமுதாயத்தினர் (நாடார்க்) மத்தியில் உள்ளது. இதுகுறித்து தலைவர் கலைஞரிடம் உரிய நேரத்தில் பேசுவேன்.

1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைய நானும் ஒரு முக்கிய காரணம். அந்தத் தேர்தலில்தான் திமுக-தமாகா கூட்டணிக்காக முதன் முதலில் நான் பிரசாரம் மேற்கொண்டேன். 1998ம் ஆண்டு திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை கருணாநிதி நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். இத்தனைக்கும் நீங்கள்தான் காரணம்.

இன்று சிலருக்காக அரசியல் கட்சி இருக்கிறது. ஆனால் நமது சமுதாயத்துக்காக ஒரு இயக்கமும் இல்லையே என்ற ஆதங்கம் இந்த மேடையில் பேசிய தலைவர்கள் மூலம் வெளிப்பட்டதை உணர முடிகிறது என்றார் சரத்குமார்.

சரத்குமாரை தனிக் கட்சி தொடங்குமாறு பல நாடார் சமூக பிரபலங்கள் நெருக்கி வரும் நிலையில் இந்த மாநாட்டை நடத்தியுள்ளார்.

மேலும் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் ரசிகர்களின் பெயரில் வெளிப்படுத்திவிட்டார் சரத்குமார்.

குமாரின் பேச்சு திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் போலீசாரால் எண்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் தம்பி சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட பல்வேறு நாடார் சமுதாயப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு ரசிகர் மன்றக் கூட்டம் என்று கூறப்பட்டாலும் கூட புதிய முயற்சி ஒன்றுக்கு (தனிக் கட்சி?) சரத்குமார் வெள்ளோட்டம் பார்த்திருப்பதாகவே கருதப்படுகிறது.

மேடை சரிந்தது:

Sarathkumar with Nayanthara

முன்னதாக, சரத்குமார் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மேடையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மேடை சரிந்தது. இதனால் நிலை தடுமாறி சரத்குமார் கீழே விழுந்தார்.

இதில் சரத்குமாரின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. மேடை சரந்ததால், அதில் கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகள் பட் பட்டென்று வெடித்துச் சிதறின, மின்சாரமும் தடைபட்டது. நல்லவேளையாக பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

இதனால் நலத் திட்ட உதவிகளை சரத்குமாரால் வழங்க முடியவில்லை. அதை ரசிகர் மன்ற நிர்வாகிகள் உரியவர்களிடம் சேர்த்து விடுவார்கள் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

திமுகவுக்கு எதிராக போஸ்டர்:

இந் நிலையில் நாடார் சமுதாயத்தின் ஓட்டுக்களை மட்டும் பெற்றுக் கொண்டு, அச் சமுதாயத்தைச் சேர்ந்த சரத்குமாருக்கு மத்திய அமைச்சர்பதவியைக் கொடுக்க மறுக்கும் திமுகவுக்கு நாடார் சமுதாயத்தினர் இம்முறை வாக்களிக்க மாட்டார்கள் என்று நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில்தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பினர் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்களால் திமுகவினர் வெகுண்டுள்ளனர். பல இடங்களில் திமுக தொண்டர்கள், போஸ்டர்களை கிழித்துப் போட்டனர். இதனால் நாடார்பேரவையினருக்கும், திமுகவினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+