அதிமுகவுக்கு பின்னடைவு; உற்சாகத்தில் தேமுதிக!
மதுரை:மதுரை மத்திய தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலை விட இடைத் தேர்லில் கிட்டத்தட்ட 15,000 ஓட்டுக்களைக்குறைவாகப் பெற்று அதிமுக பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதே சமயம் தேமுதிக கடந்த தேர்தலை விடகூடுதல் ஓட்டுக்களைப் பெற்றுள்ளது அக்கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
மதுரை மத்திய தொகுதிக்கு கடந்த 11ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்றுஎண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் கெளஸ் பாட்ஷா 50,094 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்தபடியாகவந்த அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை அபாரமாக தோற்கடித்தார்.
ராஜன் செல்லப்பாவுக்கு வெறும் 19,909 வாக்குகளே கிடைத்தன. தேமுதிக வேட்பாளர் பன்னீர் செல்வம் 17, 934வாக்குகளைப் பெற்றார்.
இடைத் தேர்தல் முடிவு அதிமுகவுக்கு பெரும் பின்னடைவக் கொடுத்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் மதுரைமத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் 43,155 வாக்குகளைமட்டுமே பெற்றார். ஆனால் கெளஸ் பாட்ஷா இதை விட அதிகமாக பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் 35,992 வாக்குகளைப் பெற்றார். ஆனால் இம்முறைராஜன் செல்லப்பாவுக்கு மிகக் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியைக்கொடுத்துள்ளது.
அதேசமயம், பொதுத் தேர்தலில் 12,038 வாக்குகளை மட்டுமே பெற்ற விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு இந்தமுறை கூடுதலாக 5000 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
அதிமுகவுக்கு கடந்த முறை கிடைத்த வாக்குகளை திமுகவும், தேமுதிகவும் பெருமளவில் பங்கு போட்டுக்கொண்டு விட்டது உறுதியாகியுள்ளது. குறிப்பாக தேமுதிக பிரித்த வாக்குகள் தான் அதிமுகவுக்கு பெரும்அடியாக அமைந்துள்ளது.
பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் கூட இந்த இடைத் தேர்தலில் பெற முடியாமல் போனது அதிமுகவுக்குபெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
அதேசமயம், தேமுதிகவின் வளர்ச்சி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே பெரும் சவாலாகஅமைந்துள்ளது. மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டுகள் அத்தனையிலும் தேமுதிக வேட்பாளருக்கு கடந்ததேர்தலை விட கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன.
மாறாக, அதிமுக வேட்பாளருக்கு அனைத்து வார்டுகளிலும் ஓட்டுக்கள் குறைந்துள்ளன. அதிமுகவின்பின்னடைவும், தேமுதிகவின் வளர்ச்சியும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தோல்வி உறுதி என தேமுதிக தொண்டர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் கூட கூடுதல்வாக்குகளைப் பெற்றிருப்பதும், அதிமுகவை விட சற்றே குறைவான வாக்குகளைப் பெற்றுத்தான் தோல்வியைசந்தித்திருக்கிறோம் என்பதும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளை அறிந்த தேமுதிகவினரும், வெற்றி பெற்ற திமுகவினரைப்போலவே உற்சாகத்துடன் காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications