இலங்கை ராணுவம் தாக்குதல்: தமிழர்கள் ஓட்டம்
வவுனியா:வவுனியா மாவட்டத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து20,000 மேற்பட்ட தமிழர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் நெருங்கேணி, ஊஞ்சல்கடி, மருகோடை ஆகிய பகுதிகளில் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இங்குள்ள தமிழர் பகுதிகளில் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது ராணுவம். இதனால் தமிழர்கள் தங்களதுவீடுகளைக் காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டுள்ளனர்.
விமானங்கள் மூலமும் இப்பகுதிகளில் தாக்குதல் நடப்பதால் தமிழர்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர். முகமாலை தளத்திலிருந்தும், வடமராச்சியைநோக்கியும் ராணுவம் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வருகிறது.
இதனால் புளியங்குளம், மகிழங்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் நிர்வாக அலுவலகம் உள்ள வன்னிக்குச் செல்லும் ஓமந்தை நெடுஞ்சாலையையும் ராணுவம் மூடி விட்டது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்:
இந் நிலையில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைதிடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது.
2 நாட்களுக்கு முன் 40 மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்றனர்.
நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு திடீரென வந்தனர். தமிழக மீனவர்கள் மீதுபட்டாசுகளை கொளுத்திப் போட்டும் துப்பாக்கியால் சுட்டும் அட்டூழியம் செய்தனர்.
இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து அவசரமாக கரைக்குத் திரும்பினர். அப்போது சீனிவாசன் என்பவரது படகைத் தடுத்து நிறுத்தியகடற்படையினர் அவர் வைத்திருந்த 5,000 ரூபாய் மதிப்புள்ள மீன்களை பறித்துச் சென்றனர்.
குண்டு பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது:
இதற்கிடையே ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அலுமினியப் பொருட்களைக் கடத்த முயன்ற 2 படகோட்டிகளை கடற்படையினர் கைது செய்து அந்தப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தனுஷ்கோடியிலிருந்து இலங்கை செல்லும் கடல் பாதையில் 5ம் தீவு பகுதியில் நாட்டுப் படகு ஒன்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்த இந்திய கடற்படை வீரர்கள் அந்தப் படகை முற்றுகையிட்டனர். அதில்மீன் பிடி வலைக்குக் கீழே பல பெட்டிகள் இருந்தன.
அந்தப் பெட்டிகளில் அலுமினியப் பாருட்கள், வெடிபொருட்கள் இருந்தன. அந்த அலுமினியப் பொருட்களை வைத்து கண்ணி வெடி தயாரிக்கலாம்.
மொத்தம் 92 பெட்டிகளில் இவை இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 2000 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் இருந்தன. அந்தப் பெட்டிகளைப் பறிமுதல் செய்த கடற்படையினர் படகில்இருந்த படகோட்டிகளான கணேஷ், முருகேசன் ஆகிய அண்ணன் தம்பிகளை பிடித்து ராமேஸ்வரம் கடற்படை முகாமுக்குக் கொண்டு வந்தனர்.
இருவரும் ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது,
மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ரவி என்பவர் தங்களைத் தொடர்பு கொண்டு இவற்றை இலங்கைக்குக் கொண்டு செல்ல வேண்டும். உதவினால் நிறையப் பணம் தருவதாக கூறியதாகவும்
இலங்கை எல்லைக்கு முன்பாக இன்னொரு நபர் வந்து படகில் இந்தப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு செல்வார். அதன் பின்னர் நீங்கள் வந்த விடலாம் எனக் கூறியதாகவும் தெரிவித்தனர்.
அதன்படி இருவரும் சென்றபோது படகு என்ஜின் பழுதாகி நின்று விட்டது. இதனால் நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டு விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அகதி ரவியை போலீஸார் தேடிச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை, தலைமறைவாகி விட்டார்.












Click it and Unblock the Notifications