செல் சாதனை-தயாநிதி மாறனுக்கு சர்வதேச விருது
டெல்லி:செல்போன் சேவையில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்ததைப் பாராட்டும் வகையில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறனுக்கு, சர்வதேச அளவிலான செல்போன் நிறுவனங்களின் சங்கம் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.
உலக அளவில் இயங்கி வரும் 700க்கும் மேற்பட்ட செல் போன் நிறுவனங்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின்சார்பில் 2007ம் ஆண்டுக்கான, அரசு தலைமைத்துவ விருது தயாநிதி மாறனுக்குக் கிடைத்துள்ளது.
செல்போன் துறையில் மிகச் சிறந்த திட்டக் கொள்கையை அமலாக்குவது மற்றும் இந்திய செல்போன் துறையின் வளர்ச்சியைப் பாராட்டி இந்த விருதுவழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சி பார்சிலோனா நகரில் நடந்தது. விழாவில் ஜிஎஸ்எம் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான ராப் கான்வே, தயாநிதிமாறனுக்கு விருதினை வழங்கினார்.
இந்தியாவில் தற்போது மாதந்தோறும் 60 முதல் 70 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மத்தியதொலைத்தொடர்புத் துறையின் அயராத பணி காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது என்று ஜிஎஸ்எம் அமைப்பு பாராட்டியுள்ளது.
கடந்த 3 வருடங்களில் இந்தியாவின் தொலைதொடர்பு அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சியை ஜிஎஸ்எம் அமைப்பு பாராட்டியுள்ளது. பல்வேறுசவால்களை சந்தித்து மிகுந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
அந்திய நேரடி முதலீட்டு சட்டத்தில் சில விதிவிலக்குகளை கொண்டு வந்ததன் மூலம், இந்தியாவில் அந்நிய முதலீடு 49% லிருந்து 74%உயர்ந்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டணங்கள் குறைத்திருக்கிறது. மேலும்செல்போன் உபகரணங்கள் தயாரிப்பையும் ஊக்குவிக்கிறது என்று ஜிஎஸ்எம் அமைப்பு பாராட்டியுள்ளது.
விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் தயாநிதி மாறன் பேசுகையில், இந்தப் பெருமை கிடைக்க மத்திய அரசும், தனியார் செல்போன் நிறுவனங்களும்மிகப் பெரும் துணை புரிந்துள்ளன.
மத்திய அரசு தனது கொள்கைகள் பலவற்றில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது, கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு தனியார் துறையினரும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
இதை விட மிகச் சிறந்த தொழில்நுட்பங்களை இந்தியாவில் கொண்டு வர, செல்போன் துறையில் மிகப் பெரும் வளர்ச்சியை எட்ட மேலும் பலவாய்ப்புகள் உள்ளன. அதை அடைய மத்திய அரசு இன்னும் தீவிரமாக பாடுபடும் என்றார் தயாநிதி மாறன்.


Click it and Unblock the Notifications
