புறக்கணித்த கிருஷ்ணசாமி: கடுப்பில் திமுக
சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை மாநகராட்சிக்கு இன்று நடந்த மறு தேர்தலில் ஓட்டுப் போடவில்லை. இதனால் திமுக தரப்புகடும் அதிருப்தி அடைந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு மயிலாப்பூரில், 142வது வார்டில் ஓட்டு உள்ளது. இன்று காலை ஓட்டுப் பதிவு தொடங்கியவுடன்,கிருஷ்ணசாமியின் வருகைக்காக திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது ஓட்டு உள்ள வாக்குச் சாவடி முன் திரண்டிருந்தனர். ஆனால்கிருஷ்ணசாமி வருவது போலத் தெரியவில்லை.
இதனால் திமுகவினரும், காங்கிரஸாரும் பெரும் ஏமாற்றமடைந்தனர். அதிலும், திமுகவினர்தான் கடும் அதிருப்தியுடன் காணப்பட்டனர். 142வதுவார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குப்பன், வெளிப்படையாகவே தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை ஏற்று முதல்வர் கருணாநிதி மறு தேர்தலுக்கு சம்மதித்தார். நீதிமன்றத் தீர்ப்பை மதித்துத்தான் இப்போது தேர்தல்நடைபெறுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டுப் போட வராதது வியப்பளிக்கிறது, ஏமாற்றம் தருவதாக உள்ளது.
மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூட இன்று தனது வாக்கை முறையாக செலுத்தி விட்டார். ஆனால் கிருஷ்ணசாமி வராதது ஏன் என்றுதெரியவில்லை என்றார்.
கிருஷ்ணசாமியின் செயல் தேர்தல் புறக்கணிப்புக்குச் சமம் என்று திமுகவினர் காட்டமாக கூறுகிறார்கள். கிருஷ்ணசாமி ஈரோட்டுக்குசென்றிருந்ததாக காங்கிரஸ் தரப்பில் கூறினாலும் அதை திமுகவினர் ஏற்க மறுக்கிறார்கள்.
இதே ஜி.கே.வாசனும் கூடத்தான், கிருஷ்ணசாமியோடு சேர்ந்து நேற்று இரவு ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர்வீரப்ப மொய்லியுடன் கலந்து கொண்டார். ஆனால் இன்று காலை சரியாக ஓட்டுப் போட வந்து விட்டார். அப்படி இருக்கையில்,கிருஷ்ணசாமியால் வர முடியாதா என்று அவர்கள் எதிர் கேள்வி போடுகிறார்கள்.
நேற்று ஈரோடு சென்ற கிருஷ்ணசாமி இன்று நாகர்கோவில் போய் விட்டதாக கூறப்படுகிறது. அங்கு மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் நாளைநடைபெறவுள்ள பாதயாத்திரையை அவர் தொடங்கி வைக்கிறார். ஆனால் தேர்தலைப்புறக்கணிக்கும் வகையில்தான் அவர் நாகர்கோவில் போய் விட்டதாக திமுக தொண்டர்கள் குமுறுகிறார்கள்.
கிருஷ்ணசாமியின் புறக்கணிப்பைக் கண்டித்து கிருஷ்ணசாமியின் வாக்கு உள்ள வாக்குச் சாவடி முன்பு கூடி திமுகவினர் போராட்டம் நடத்தினர்.ஜெயலலிதாவைப் பின்பற்றி கிருஷ்ணசாமியும் தேர்தலைப் புறக்கணித்துள்ளார் என்று சிலர் ஆவேசமாக கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து நாகர்கோவிலில் இருந்த கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது, எனக்கு 143 வார்டிலோ அல்லது இன்று மறு தேர்தல் நடைபெறும் எந்தவார்டிலுமோ ஓட்டு கிடையாது. எனவேதான் நான் ஓட்டளிக்க வரவில்லை என்றார்.
ஆனால் 143வது வார்டில்தான் கிருஷ்ணசாமிக்கு ஓட்டுரிமை உள்ளது என்று திமுக வேட்பாளர் குப்பன் அடித்துக் கூறுகிறார்.
கிருஷ்ணசாமி ஓட்டுப் போட வராதது திமுக தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications