தாதா வீரமணியின் வலது கரம் கைது
சென்னை:நடுக்கடலில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த மறைந்த தாதா அயோத்திக்குப்பம் வீரமணியின் வலது கையான தர்மன் என்பவர் உள்பட 2பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கரில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வழக்கறிஞர் சண்முகம் என்பவரின் மனைவி சாந்தி படுகொலைசெய்யப்பட்டார். பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலையில், சாந்தி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்தக் கொலை வழக்கில் துப்பு துலங்காமல் இருந்து வந்தது. பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணைநடத்தி குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்தனர்.
சென்னையில் பெரும் அட்டூழியம் செய்துவந்த, மெரீனா கடற்கரையில் வைத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா வீரமணியின் வலதுகரமான தர்மன் என்பவர்தான் சாந்தியைக் கொலை செய்தது தெரிய வந்தது.
சோளிங்கர் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் தங்கியிருந்த தர்மன், தனது கூட்டாளி சுரேஷ் என்பவருடன் சேர்ந்து சாந்தியைக் கொலைசெய்து நகையைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து தர்மனையும், சுரேஷையும் போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். சாந்தியிடமிருந்து அவர்கள் திருடிச் சென்ற நகைகளைஅடகு வைக்கப்பட்ட சேட் கடையிலிருந்து மீட்டனர்.
சிறு வயதிலேயே ரவுடி ஆனவர் தர்மன். கஞ்சா, மது, பெண் சகவாசம் என எல்லா கெட்டப் பழக்கங்களும் உண்டு. பணப்பாக்கத்தைச் சேர்ந்த கவிதாஎன்ற பெண்ணைக் காதலித்து மணந்துள்ளார். தர்மன் ஒரு ரவுடி, வீரமணியின் கூட்டாளி என்பது கவிதாவுக்குத் தெரியாதாம்.
இளம் வயதிலேயே வீரமணியிடம் அடியாளாக சேர்ந்து விட்டார் தர்மன். அதன் பின்னர் வீரமணியின் நம்பிக்கையைப் பெற்று வலது கரமாகமாறியுள்ளார். வீரமணி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் தர்மன் பனப்பாக்கத்துக்குத் தப்பி ஓடி விட்டார்.
தர்மன் மீது 34 வழக்குகள் உள்ளன. 4 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே போய் வந்துள்ளார். வீரமணி இருந்தபோது நடிகர்,நடிகைகளை மிரட்ட மார்வாடிகளும், பைனான்சியர்களும் வீரமணியைத்தான் நாடுவார்களாம்.
அந்த நடிகர், நடிகையரை ஆட்களை விட்டு அழைத்து வரச் சொல்லும் வீரமணி, அவர்களை படகில் ஏற்றி நடுக் கடலுக்குப் போய் விடுவான். அங்குஉட்கார்ந்து கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்வான். பணத்தைக் கொடுத்து விட்டால், கரைக்குப் போய்ச் சேரலாம், இல்லாவிட்டால் இப்படியேகடலில் மூழ்கிச் சாக வேண்டியதுதான் என்று அவர்களை மிரட்டி பைனான்சியர்களுக்குத் தேவையான பணத்தை கறந்து விடுவானாம்.
இத்தகைய செயலில் தர்மன்தான் வீரமணிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார். அவர்தான் நடிகர், நடிகைகளை கடத்தி வருவதற்கு உதவுவாராம்.
வீரமணி தவிர வெள்ளை ரவி, நாகேந்திரன் ஆகிய தாதாக்களிடமும் தர்மன் அடியாளாக இருந்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications