இதுவரை 7,171 ஏக்கர் நிலம் விநியோகம்: அன்பழகன்
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகளுக்கு 7,171 ஏக்கர் தரிசு நிலம் மேமம்படுத்தி வழங்கப்பட்டுள்ளதாக மாநில நிதியமைச்சர் அன்பழகன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. நிதியமைச்சர் அன்பழகன் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இலவச அரசு நிலம் வழங்கப்பட்டது.
மேலும் கடந்த ஆட்சியாளர்கள் கூறியதைப் போல தமிழகத்தில் 25 லட்சம் ஹெக்டேர் நிலம் இல்லை. ஏழைகளுக்கு இலவச நிலத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலம் வேறு, தரிசு நிலத்தை மேம்படுத்தி வழங்கப்படும் நிலம் வேறு.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேம்படுத்தப்பட்ட நிலங்கள் 7,171 ஏக்கர் அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ கோவிந்தசாமி பேசுகையில், கடந்த ஆட்சியில், ஏழைகளுக்கு இலவச நிலம் தர முடியாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையிலேயே கூறியதாக குறிப்பிட்டபோது அதிமுகவினர் கொந்தளித்தனர்.
கோவிந்தசாமியின் பேச்சைக் கண்டித்து அவர்கள் மொத்தமாக எழுந்து கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறிய சில கருத்துக்களுக்கு அமைச்சர்கள் சிலரும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் பதில் அளித்தனர்.
இதனால் சில நிமிடங்களுக்கு அங்கு யார் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியாமல் சலசலப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications