புலிகள் தாக்குதல்: இலங்கை கடும் கண்டனம்
கொழும்பு:கொழும்பு காட்டுநாயகே விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை இனப் போர் நேற்று புதிய கோணத்துக்கு மாறியது. இதுவரை தரை வழியாகவும், கடல் மார்க்கமாகவும் அரசுப் படைகளுடன் மோதி வந்த விடுதலைப் புலிகள் நேற்று தங்களது வான்வழித் தாக்குதலுக்குப் பிள்ளையார் சுழி போட்டனர்.
நேற்று நள்ளிரவு, காட்டுநாயகே விமானப்படைத் தளத்தை இரண்டு விமானங்கள் மூலம் தாக்கிய அவர்கள் விமானப்படையினர் மூன்று பேரைக் கொன்றனர், பலர் படுகாயமடைந்தனர்.
புலிகளின் இந்த வான்வழித் தாக்குதல் இலங்ைக அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. புலிகள் வான் வழியாக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னிப் பகுதியில் புலிகளுக்கு விமான தளம் உள்ளாக முன்பே செய்திகள் வெளியாகின. ஆனால் இதை இலங்கை அரசு மறுத்து வந்தது. அதற்கான வாய்ப்பே இல்லை என்று இலங்கை ராணுவமும் கூறியது. ஆனால் விமான தளத்தை புலிள் அைமத்துள்ளது நேற்றைய தாக்குதல் மூலம் உறுதியாகியுள்ளது.
வான்புலிகள் (ஏர் டைகர்ஸ்) என்று தங்களது விமானப் படைக்கு புலிகள் இயக்கம் பெயரிட்டுள்ளது. இரு விமானங்களில் வந்து விமானப் படைத் தளத்தை தாக்கி விட்டு புலிகள் சென்றுள்ளது இலங்கைப் படையினர் மத்தியில் புதிய பீிதியை ஏற்படுத்தியுள்ளது.
புலிகளின் இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவத்தை இலங்கை அரசு கடுமையாக கண்டிக்கிறது. வடக்கிலும், கிழக்கிலும் ஏற்பட்ட தொடர் தோல்வியைத் தொடர்ந்து இந்தத் தாக்குதலை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.
விமானப் படைத் தளத்தின் மீது அவர்கள் நடத்திய தாக்குதல் தோல்வியைத் தழுவியது. அங்கிருந்த போர் விமானங்களுக்கோ அல்லது ஓடுதளத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமானப் படைத்தளத்தின் பொறியில் பிரிவு அருகேதான் தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் போட்ட மூன்று குண்டுகளில் இரண்டு மட்டுேம வெடித்தது. மூன்றாவது குண்டு வெடிக்கவில்லை.
தாக்குதலைத் தொடர்ந்து விமானப்படை பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. இதனால் புலிகளின் அடுத்தடுத்த தாக்குதல்கள் தடுக்கப்பட்டு விட்டன.
விமானப் படைத் தளத்திற்கு அருகே உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையம் தற்போது வழக்கம் போல இயங்கி வருகிறது. கொழும்பிலிருந்து செல்லும் விமானங்களும், கொழும்புக்கு வரும் விமானங்களும் வழக்கம் போல வந்து, செல்கின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
புலிகள் பயன்படுத்திய விமானங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை. இந்த விமானங்களை புலிகள் எங்கு வாங்கினார்கள், அவர்களின் விமான தளம் எங்கு உள்ளது, எங்கு விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றார்கள் என்பது பெரும் மர்மமாக உள்ளது.












Click it and Unblock the Notifications