புலிகள் அதிரடி விமான தாக்குதல்: 2 இலங்கைவிமானப் படையினர் பலி-கொழும்பில் பீதி
கொழும்பு: கொழும்பில் உள்ள இலங்கை விமானப்படை தளம் மீது விமானங்கள் மூலம் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். இதில் 2 விமானப்படையினர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். விமானப்படை தளம் லேசாக சேதமடைந்தது.
விடுதலைப் புலிகள் விமானம் மூலம் நள்ளிரவில் நடத்திய இந்தத் தாக்குதல் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.கொழும்பு புறநகரான காட்டுநாயகே என்ற இடத்தில் சர்வதேச விமான நிலையமும், அதற்கு அருகே விமானப்படை தளமும் உள்ளன. நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான இரு விமானங்கள் விமானப்படை தளம் மேலே பறந்து வந்தன.
வந்த வேகத்தில் அவற்றிலிருந்து விமானப்படை தளம் மீது சரமாரியாக வெடிப்பொருட்கள் (குண்டுகள்?) வீசப்பட்டன. பலத்த சப்தத்துடன் அவை வெடித்ததில் விமானப்படையைச் சேர்ந்த 2 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக கொழும்பு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் அஜந்தா சில்வா கூறுகையில், விமானப்படைத் தளத்திற்கு பெரிய அளவில் சேதம் இல்லை, தாக்குதல் நடத்திய விமானத்தைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்திற்கும் சேதம் ஏதும் இல்லை என்றார் சில்வா.
காட்டுநாயகே விமானப்படைத் தளத்திலிருந்து தான் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை இலங்கை விமானப்படை மேற்கொண்டு வருகிறது. விமானப்படையின் ஒரே விமான தளம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் துப்பாக்கிச் சண்டை:
இதற்கிடையே விமானப் படைத் தளம் மீது நான்கு முறை குண்டு வீசப்பட்டதாகவும், அதன் பின்னர் கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கு கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
12.45 மணியிலிருந்து 1 மணி வரை இந்தத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications