உல்மர் கொலை: லாராவிடம் விசாரணை
கிங்ஸ்டன்: பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் லாராவிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பயிற்சியாளர் கடந்த வாரம் மர்மமான முறையில் ஹோட்டலில் சுய நினைவிழந்த நிலையில் கிடந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்து வரும் ஜமைக்கா போலீசார் உல்மரை 2 அல்லது 3 பேர் சேர்ந்து கழுத்தை நெறிந்து கொலை செய்திருக்க கூடும் என கூறியுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் உல் ஹக், துணை பயிற்சியாளர் முஸ்தாக் அகமது ஆகியோரிடம் 2 முறை ஜமைக்கா போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் சில சந்தேகங்கள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்று ஜமைக்கா போலீசார் கூறி அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தனர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக உல்மரின் நேர் எதிரே இருந்த அறையில் தாங்கியிருந்த மேற்கிந்திய அணியின் கேப்டன் லாராவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக அவருக்கு ஏதாவது தகவல் தெரிந்து இருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் லாராவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
கொலை நடந்த ஹோட்டல் மற்றும் ஒவ்வொரு தளங்களிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை தற்போது ஆய்வு செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கேமிராவில் கொலையாளிகளின் முகம் பதிவாகி இருக்கலாம் என போலீசார் நம்புவதால் இந்த விசாரணையில் முக்கியத் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications