திமுக ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் இல்லை- பாமக
விருத்தாச்சலம்:திமுக ஆட்சி தனது 5 ஆண்டு பதவிக் காலத்தையும் முடிக்க பாமக முழு ஆதரவு தரும். ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. ராமதாஸ் அப்படிச் செய்ய மாட்டார் என்று பாமகவைச் சேர்ந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடந்த பாமக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் வேலு பேசுகையில், ரயில்வே துறையில் டாக்டர் ராமதாஸின் கனவுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
60 ஆண்டுத் தமிழக கனவுத் திட்டங்கள் இப்போது படிப்படியாக நிறைவேறிக் கொண்டிருக்கினறன. லாலு பிரசாத் தலைமையில், டாக்டர் ராமதாஸின் வழிகாட்டுதலில் இந்தத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
நாட்டில் எங்கும் இல்லாத வகையில், விருத்தாச்சலம் டவுன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் சந்திப்பு வரை மக்களின் நலனுக்காக தனி ரயில் விடப்பட்டது. இதெல்லாம் பாமகவின் சாதனைகள்.
அரசியலில் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். திமுக அரசு குறித்து பாமக கூறி வரும் கருத்துக்கள் அரசுக்கு கூறப்படும் ஆலோசனைகள்தான், விமர்சனங்கள் அல்ல.
முதல்வர் கருணாநிதிக்கு ராமதாஸின் பூரண ஆதரவு உண்டு. கடைசி வரை கலைஞருக்கு ராமதாஸ் தோள் கொடுப்பார். முழு பதவிக் காலத்தையும் திமுக அரசு பூர்த்தி செய்ய ராமதாஸ் ஆதரவு கொடுப்பார் என்றார் வேலு.












Click it and Unblock the Notifications