கடலூர் அருகே 6 இலங்கை மீனவர்கள் கைது
கடலூர்:கடலூர் அருகே இந்திய எல்லைக்குள் புகுந்து விட்ட இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களை தமிழக மீனவர்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு அருகே படகில் 6 பேர் இவர்களைப் பார்த்து கை அசைத்துள்ளனர்.
என்ன, ஏது என்று அந்தப் படகுக்கு அருகே சென்று தமிழக மீனவர்கள் பார்த்தனர். அப்போது அப்படகில் 6 இலங்கை மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் அந்த மீனவர்களை அவர்களது படகோடு சேர்த்து கரைக்கு கூட்டி வந்தனர். கரையில் தயாராக இருந்த போலீஸார் 6 இலங்கை மீனவர்களையும் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து விசாரித்தபோது, அவர்களின் பெயர்கள் நிசன் சோமரா, சமீரா, ராஜேஷ் துஷாரி, கசன் ரசங்கா (அனைவரும் திரிகோணமலை), தமீத் நந்தனே, அமிலா மனோஜ் பிரசாத் (இருவரும் மாத்தரை).
6 இலங்கை மீனவர்களும் கடந்த 27ம் தேதி கொத்தே என்ற மீன்பிடி துறைமுகத்திலிருந்து கிளம்பியுள்ளனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு பழுதடைந்தது. இதனால் படகை செலுத்த முடியவில்லை.
சரி என்று 6 பேரும் படகிலேயே படுத்துத் தூங்கியுள்ளனர். அடுத்த நாள் காலை கண் விழித்தபோது, படகு தேவனாம்பட்டிம் பகுதியில் வந்து நின்றதை அறிந்துள்ளனர்.
இவர்களுக்கு சிங்களம் மட்டுமே தெரியும் என்பதால், அருகில் உள்ள முகாமிலிருந்து இலங்கைத் தமிழர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் இலங்கை மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
6 பேரும் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications