Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் ஆபாச கூச்சல்-செருப்பு காட்டல்:4 அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களால் ஆத்திரமடைந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களை நோக்கி ஆவேசமாக பாய்ந்தனர். ஆபாசமாக கூச்சலிட்டபடியும், செருப்பைக் காட்டியும் அவர்கள் கோபமாக பேசியதால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. 4 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்றவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டசபையில், இன்று பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனது துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து பேசினார். அப்போது, ஜெயலலிதா குறித்து சில கருத்துக்களைக் கூறினார். இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பன்னீர் செல்வத்தை நோக்கி கோபமாக பேசிய அவர்கள் பன்னீர் செல்வம் தனது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பன்னீர் செல்வத்தின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடலாம் என சபாநாயகரை கேட்டுக் கொண்டார். இதையடுத்து பன்னீர் செல்வத்தின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

பின்னர் சபையில் சுமூக நிலை திரும்பியது. ஆனால் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவை மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்தது.

வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், திமுகவுக்கு துரோகம் செய்தவர் எம்.ஜி.ஆர். என்று கூறினார். இதைக் கேட்டதும் அதிமுகவினர் கொதிப்படைந்தனர். அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளை நோக்கி பாய்ந்தோடி வந்தனர்.

இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்களும் அங்கு விரைந்து வந்தனர். இதனால் பெரும் ரசாபாசம் ஏற்படும் நிலை உருவாகியது. அதிமுகவினரை இருக்கைகளுக்கு திரும்புமாறு சபாநாயகர் கோரினார். ஆனால் அவர்கள் கேட்பதாக தெரியவில்லை.

வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் பன்னீர் செல்வத்தை நோக்கி கடுமையாகப் பேசினர். சில எம்.எல்.ஏக்கள் ஆபாச சைகைளைச் செய்தபடி கோபமாக ஏதோ கூறினர்.

அப்போது தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.கலைராஜன், தான் அணிந்திருந்த செருப்பைத் தூக்கி திமுகவினரை நோக்கி காட்டி வேகமாக வீசுவது போல செய்தார். அவரை அருகில் இருந்த எம்.எல்.ஏக்கள் அமைதிப்படுத்தினர். ஆனால் ஆவேசம் தணியாத கலைராஜன், திமுகவினரை நோக்கி ஆபாசமாக கூச்சலிட்டபடி, ஆபாச சைகையையும் காட்டினார்.

இதைக் கேட்டதும் திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று ஆவேசமாக பேசினர். இதனால் சபையில் பெரும் அமளியும், கூச்சல், குழப்பமும் நிலவியது. அப்போது சபையில் முதல்வர் கருணாநிதி இல்லை.

அதிமுகவினரை அமைதிப்படுத்த சபாநாயகர் பலமுறை முயன்றும் முடியவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த சபாநாயகர் அதிமுகவினரை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதிமுகவினர் அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னர் அமைச்சர் துரைமுருகன் எழுந்து, உறுப்பினர் கலைராஜனின் செய்கை மிகவும் அநாகரீகமானது. அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் அவர் நடந்து கொண்டார். அவரது செய்கையும், பேச்சும் மன்னிக்கப்படக் கூடியது அல்ல.

ஆளுங்கட்சியனரை நோக்கி செருப்பைக் காட்டியுள்ளார். ஆபாசமாக பேசியுள்ளார். இந்த அவையில் உறுப்பினராக இருக்கக் கூட அவருக்குத் தகுதி இல்லை என்பதையே அவரது நடவடிக்கை காட்டியுள்ளது.

அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பின்னர் சபை முன்னவரும், நிதியமைச்சருமான அன்பழகன் எழுந்து இதுதொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அன்பழகன் பேசுகையில், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நடந்து கொண்ட (முன்னாள் அமைச்சர்கள்) நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் வி.பி. கலைராஜன் ஆகியோரை இந்த அவையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார்.

பின்னர் இதை வழிமொழிந்த சபாநாயகர் ஆவுடையப்பன் அவையின் முடிவுக்கு அதை விட்டார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு அதிமுக எம்.எல்.ஏக்களும் மே 11ம் தேதி வரைக்கும் (அதாவது இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரைக்கும்) சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

அதிமுகவினர் மீதான இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+