சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க சதி-ராமதாஸ்
சென்னை:சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிகள் நடந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தென்னிந்தியாவில் முதலிடத்திலும், இந்தியவில் 3வது இடத்திலும் உள்ள சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மணபாக்கம், பெருகம்பாக்கம், காட்டுபாக்கம் பகுதியில் தற்போது 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
800 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்தாலும் அடுத்த 7 ஆண்டுகளில் இடம் போதாது. அதனால் உலக்த் தரம் வாய்ந்த நவீன விமான நிலையம் (கிரீன் பீல்டு) சென்னைக்கு தேவை. இந்த விமான நிலையம் அதன் வளர்ச்சிக்கேற்ப 50 ஆண்டுகள் தாக்குபிடிக்கும். இதற்கு 5,000 ஏக்கர் நிலம் தேவை.
இப்போது விமான விரிவாக்க பணிக்கு ரூ. 1,150 கோடி திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு திட்டமிடப்பட்டுள்ள படி விரிவாக்கம் செய்தால் 7 ஆண்டுகள் தான் பயன்பெற முடியும். ஆனால் ரூ. 2,000 கோடி செலவில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைத்தால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிரச்சனை இருக்காது.
சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு ரூ. 380 கோடி லாபத்துடன் செயல்பட்டு வருகிறது. அதை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும். 1999 முதல் விரிவாக்கம் பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
அதே கால கட்டத்தில் பேசப்பட்டு முடிவு எடுக்கப்பட்ட பெங்களூரூ, ஹைத்ராபாத் ஆகிய நகரங்களில் கிரீன் பீல்டு விமான நிலையம் கட்டப்பட்டு 2008 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த நவீன விமான நிலையத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கலாம். ஸ்ரீபெரும்புதூர் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடம். இப்போதுள்ள விமான நிலையத்தோடு புதிதாக கட்டபடும் விமான நிலையமும் செயல்படலாம்.
சென்னை விமான நிலைய ஊழியர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அப்போது விமான நிலையத்தை தனியாரிடம் விற்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர். கொல்கத்தா விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ. 1,544 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. சென்னை விமான நிலைய விவாக்கத்துக்கு நிலம் கையகபடுத்துவதில் மாநில அரசு என்ன செய்ய போகிறது.
சிஜடியூ, சிபிஎம் ஆகிய கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதி கொல்கத்தா விமான நிலைய விரிவாக்க பணியை ஏர்போர்ட் அத்தாரிட்டியிடம் ஒப்படைத்தது. அதேபோல தமிழக அரசும் பிரதமருக்கு கடிதம் எழுதி சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணியை தனியாரிடம் கொடுக்கமால் ஏர்போர்ட் அத்தாரிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
ஏற்கனவே இதை வலியிறுத்தி பாமக சார்பில் நான் கடிதம் எழுதியிருக்கிறேன். விமான நிலையை விரிவாக்க பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் நிறைய சிக்கல்கள் வரும் அதை கட்டுபடுத்த அரசிடம் எந்த கட்டுபாடும் இல்லை.
எனவே சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்க பணியையும் அதன் இயக்கத்தையும் எக்காரணத்தை கொண்டும் தனியார் மயமாக்கக்கூடாது.
ஆனால் சில சக்திகள் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். தமிழக நலன் கருதி இதை அச்சக்திகள் கைவிட வேண்டும். மும்பையில் இருப்பது போல 2வது விமான நிலையம் அமைய அவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும். புதிய விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து சட்டசபையில் பேசுவோம் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications