இடஒதுக்கீடு மனு-மே 8ம் தேதியே விசாரணை
டெல்லிபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மத்திய அரசின் மனு மே 8ம் தேதியே விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.
இந்த சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையிலான 2 பேர் கொண்ட பெஞ்ச், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
மேலும், இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று கூறிய பெஞ்ச் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்து விட்டது.
இந் நிலையில், விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. பின்னர் விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்குப் பதில் மே 8ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் பெஞ்சுக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிலன் பானர்ஜி தாக்கல் செய்த மனுவில், பிற்பட்ட வகுப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு கோருகிறது.
இந்திய வெளிநாட்டு வர்த்தக கழகம் தனது பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏற்கனவே நடவடிக்கைகளை தெடாங்கி விட்டது.
9 ஓ.பி.சி மாணவர்களுக்கு அனுமதிக் கடிதமும் கூட அனுப்பிவிட்டது.
மேலும், சென்னை மற்றும் டெல்லி ஐஐடி நிறுவனங்கள் 2 ஆண்டு எம்.பி.ஏ வகுப்புக்கான கூட்டு நுழைவுத் தேர்வையும் அறிவித்து விட்டன என்று கூறியிருந்தார்.
மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் மத்திய அரசின் இந்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார். நீதிபதி பசாயத் பெஞ்ச் முன்புதான் அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் முன்புதாக்கல் செய்துள்ளது தவறானது என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இந்த மனுவை விசாரிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் தவறாக நினைக்கவில்லை. இதில் பாரபட்சமோ, விதி மீறலோ இருப்பதாக நான் நினைக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications