ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதல்ல
சென்னை:ராமர் பாலத்தை (ஆதாம் பாலம்) மனிதர்கள் உருவாக்கியதற்கான எந்த அடையாளமும் இல்லை என சேது சமுத்திர திட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவர் கண்ணையன் கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்ட கால்வாய் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டம் முடிந்த பின் சேது சமுத்திரட திட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தலைவர் கண்ணையன் நிருபர்களிடம் கூறியதாவது,
சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணி 2ம் கட்டமாக மன்னார் வளைகுடா பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆதாம் பாலம் இருக்கும் பகுதியில் தற்போது 1.1 மில்லியன் கன அடி அளவுக்கு தோண்டும் பணி முடிவடைந்துள்ளது. இன்னும் அதில் 48 மில்லியன் கன அடி தோண்டப்பட வேண்டும்.
மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் 35 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. சேது சமுத்திர திட்டத்தற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2,427 கோடியில் இதுவரை ரூ. 189 கோடி செலவாகியுள்ளது. சேது சமுத்திர திட்டம் 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திட்ட நிதியில் இருந்து ரூ. 60 கோடி மீனவர்களுகாக ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு ரூ. 20 லட்சம் செலவில் பாசி வளர்த்தல், நண்டு வளர்த்தல் போன்றவற்றிற்கான பயிற்சி கொடுக்கப்படவுள்ளது.
சேது சமுத்திர திட்ட அகழ்வு பணி காரணமாக இதுவரை எடுக்கப்பட்ட ஆராய்ச்சியில் கடல் வாழ் உயிரினங்கள், கடலில் உள்ள படிமங்கள், கடல்வாழ் நுண்ணுயிரிகள், பாக்கடீரியாக்கள் போன்றவைகளுக்கு இதுவரை எந்த தீங்கும் இல்லை.
கடல் நீரில் கலங்கல் தன்மை அதிகமாக இருந்தால், அதில் உள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும், ஆனால் சேது சமுத்திர திட்ட அகழ்வு பணிகளால் இதுவரை நீரின் கலங்கல் தன்மையில் சிறிதளவு மாற்றம் இருந்தாலும் அது உயிரினங்களை பாதிக்கவில்லை. மேலும் மீன் வளமும் குறையவில்லை.
ராமர் பாலத்தின் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்துக்கு பாறை மாதிரிகளை ஜியோ கெமிக்கல் முறையில் சோதனை செய்துள்ளோம். அதில் கடலில் உள்ள படிமங்கள் தான் உள்ளன.
அறிவியல் ரீதியாக ராமர் பாலத்தை மனிதர்கள் உருவாக்கியதற்கான எந்த அடையாளமும் இல்லை. பாலம் இருக்கும் இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் கால்வாய் தோண்டினால், மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 26 தீவுகளும் அழிந்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications