ஆள் கடத்தல் தெலுங்கானா எம்பி நீக்கம்
ஹைதராபாத்:வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்திய விவகாரத்தில் சிக்கியுள்ள தெலுங்கான ராஷ்டிரிய சமிதி எம்.பி. நரேந்திரா அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா, கனடாவுக்கு ஒரு பெண்ணையும், சிறுவனையும், தனது மனைவி, மகன் பாஸ்போர்ட்களை போர்ஜரி செய்து அழைத்துச் செல்ல முயன்று பிடிபட்டார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் பல எம்.பிக்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்து நாட்டையே உலுக்கியுள்ளது. தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் அடிபட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள தெலுங்கானா கட்சியின் மற்றொரு எம்.பியான நரேந்திரா கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
நரேந்திராவுக்கு ஆள் கடத்தல் விவகாரத்தில் நெருங்கிய தொடர்பு உள்ளாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நரேந்திரா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தனது கட்சி எம்.பிக்களான ரவீந்திர நாயக், மதுசூதன் ரெட்டி ஆகியோரின் பாஸ்போர்ட்டுகளை கடந்த 2006ம் ஆண்டு வாங்கி அவற்றில் மோசடி செய்துள்ளாராம் நரேந்திரா. அவர்களுக்குத் தெரியாமல் இந்த மோசடியை செய்து விசாவும் பெற்று ஜப்பான், தென் கொரியா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல பயன்படுத்தியுள்ளார் நரேந்திரா என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த இரு எம்.பிக்களின் பெயரிலும் போலியான கடிதங்களை மேற்கண்ட நாடுகளின் தூதரக அலுவலகங்களுக்கு அனுப்பி சிலருக்கு விசா வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தெரிய வந்ததும் இரு எம்.பிக்களும் சம்பந்தப்பட்ட தூதரகங்களைத் தொடர்பு கொண்டு தாங்கள் யாரையும் பரிந்துரைக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
இவை அனைத்திற்கும் நரேந்திராதான் காரணம் என இரு எம்.பிக்களும் கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவிடம் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து நரேந்திராவை கட்சியை விட்டு நீக்க கட்சித் தலைமை முடிவு செய்ததாம்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள், இன்னாள் எம்.பிக்கள் சிலரின் பெயர்களும் ஆள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications