குண்டூசி எறிந்து விளையாடிய எம்.எல்.ஏக்கள்
சென்னை:சட்டசபையில் அதிமுக பெண் எம்.எல்.ஏ தேன்மொழி குண்டூசி டப்பாவை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ஜெயலலிதாவைப் போல ஒரு தலைவரும் இந்தியாவில் இல்லை. அவர் மீது அத்தனை நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன என்றார்.
இதைக் கேட்டதும், அதிமுக எம்.எல்.ஏக்கள் கோபமடைந்து எழுந்து நின்று உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முன்வரிசையில் அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் டேபிளுக்கும், சபாநாயகர் இருக்கைக்கும் நடுவே உள்ள காலியிடத்தில் குண்டூசி டப்பா ஒன்று வந்து விழுந்தது.
இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் ஆவுடையப்பன், அதிமுகவினர் பக்கம் திரும்பி அங்கிருந்துதான் குண்டூசி டப்பா வந்துள்ளது. யார் அதை வீசியது என்றார். அப்போது சிலர் அதிமுக எம்.எல்.ஏ தேன்மொழிதான் அதை வீசியதாக சபாநாயகரிடம் கூறினர்.
அதுகுறித்து தேன்மொழி கூறுகையில், திமுக பக்கம் இருந்து என் மீது குண்டூசி டப்பா வீசப்பட்டது. அதைத்தான் நான் தூக்கி திருப்பி எறிந்தேன் என்றார்.
ஆனால் திமுக தரப்பிலிருந்து யாரும் வீசவில்லை என்றனர். அப்போது குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி, காங்கிரஸ் உறுப்பினர் அருள் அன்பரசு குண்டுசி டப்பாவை தனது டேபிளில் ஃபைல் மீது வைத்திருந்தார். பீட்டர் அல்போன்ஸ் பேசிய பேச்சை ஆதரித்து அருகில் இருந்த இன்னொரு எம்.எல்.ஏ மேசையை பலமாக தட்டினார்.
அப்போது குண்டூசி டப்பா பறந்து போய் தேன்மொழியிடம் விழுந்துள்ளது போலும் என்றார். இதைக் கேட்டதும் சபாநாயகர், குண்டூசி டப்பா விழுந்ததும் அதை என்னிடம் கூறாமல் தேன்மொழி திருப்பி எறிந்தது தவறு. இனி இப்படி நடக்கக் கூடாது என்று எச்சரித்தார்.
நேற்று விடுதலைப் புலிகளை ஆதரித்து வைகோ பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு ரிப்பன் அணிந்து வந்தனர். அதற்காகத்தான் குண்டூசி டப்பாவை கொண்டு வந்திருந்தனர். அதுதான் நேற்று குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.












Click it and Unblock the Notifications