போலி பாஸ்போர்ட் மூலம் ஆள் கடத்தல்திமுக பிரமுகரின் மருமகன் சிக்கினார்
சென்னை:போலி பாஸ்போர்ட் மூலம் 60 பேரை இங்கிலாந்துக்கு அனுப்ப முயன்ற திமுக பிரமுகரின் மருமகன் உள்பட 2 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் போலி மனைவி, மகனுடன் குஜராத் மாநில பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் பல எம்.பிக்கள் இந்த விவகாரத்தில் சிக்கி வருகின்றனர்.
கத்தாராவை மிஞ்சும் வகையில் மனைவி என்று கூறி வேறு ஒரு பெண்ணின் பெயரில் பாஸ்போர்ட் எடுத்த தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ லிங்கையாவும் கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.
இந் நிலையில், சென்னையிலிருந்து ஏராளமான பேரை போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பிய 2 பேர் அடங்கிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புறநகரான தாம்பரம், முடிச்சூர் சாலையில் வசிப்பவர் விஜய் ஹரிதேவ். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேஷியராக வேலை பார்த்தவர். பின்னர் அந்த வேலையை உதறி விட்டு சினிமா படங்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் வேலையில் குதித்தார்.
பிறகு குளோபல் ஏஜென்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சியைத் தொடங்கினார். கே.கே.நகரில் இந்தஅ லுவலகம் உள்ளது. இவரது நண்பரான தயாளன் லண்டனில் உள்ளார். அவர் மூலம்தான் வேலைக்கு ஆட்களை அனுப்பும் பணியை செய்து வந்தார் விஜய் ஹரிதேவ்.
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப முறைப்படி ஹரிதேவ் உரிமம் பெறவில்லை. மாறாக, போலி விசா, ஆவணங்கள், பாஸ்போர்ட்டுகள் தயார் செய்து ஆட்களை அனுப்பி வந்துள்ளார்.
இதுவரை 60 பேரை இப்படி போலி பாஸ்போர்ட் மூலம் அவர் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் மேலும் 60 பேரை போலி பாஸ்போர்ட் மூலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் ஹரிதேவ். இதற்காக இங்கிலாந்து தூதுரகத்திற்கு விசா கோரி ஆவணங்களை அனுப்பியிருந்தார். ஆனால் அவர் அனுப்பிய பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்துமே போலியானவை என தெரிய வந்தது.
இதையடுத்து இங்கிலாந்து தூதரகம் செனனை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தது. அதன் பேரில், போலீஸார் அதிரடியாக செயல்பட்டு ஹரிதேவைக் கைது செய்தனர். அவருடைய உதவியாளர் செந்தில் என்பவரும் சிக்கினார்.
கைதாகியுள்ள ஹரிதேவ் சாதாரண ஆசாமி அல்ல, அவரது மாமனார் திமுகவில் முக்கியப் பிரமுகராக உள்ளாராம். தியேட்டரும் வைத்துள்ளார். ஹரிதேவின் மனைவி வெற்றிச் செல்வி தாம்பரம் நகராட்சி திமுக கவுன்சிலராக இருந்தவர்.
விஜய் ஹரிதேவின் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications