டாக்டர் பட்டங்களை வாரி வழங்கியவர்கைது - கொத்தனாரும் டாக்டர் ஆனார்
மதுரை:போலியான பல்கலைக்கழகத்தை நடத்தி அதன் மூலம் டாக்டர் பட்டங்களை விற்பனை செய்து வந்த முன்னாள் பேராசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் கொத்தனாருக்கும் எம்.டி. பட்டத்தை விற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாகர்கோவிலில் வில்சன் என்ற போலி டாக்டர் பிடிபட்டார். இவர் கொடுத்த மருந்துகள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஸ்ரீராம் என்கிற நுகர்வோர் அமைப்பின் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர் போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் வில்சன் ஒரு போலி டாக்டர் எனத் தெரிய வந்தது. அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி என்பவர்தான் என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து மதுரை வந்த ஸ்ரீராம் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அவர் தென் மண்டல ஐஜி சஞ்சீவ்குமாருக்குத் தெரிவிக்கவே அவரது உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.
நாகமலைப் புதுக்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் உள்ள குமாரசாமி தெருவில் மணியின் வீடு உள்ளது. அந்த வீட்டை முற்றுகையிட்ட போலீஸார் அங்கு பல மணி நேரம் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல பலே தகவல்கள் தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
மணி, உசிலம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் சமூகவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றிக் கொண்டு இன்ஸ்டிடியூஷன் ஆப் செல் தெரபி என்ற போலி பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தார்.
இந்த போலி பல்கலைக்கழகத்தில் ஆர்.எம்.பி, எம்.டி, பி.ஏ.எஸ்.எம், ஏ.எம்.பி.எச்.டி ஆகிய பட்டங்களை விற்க ஆரம்பித்தார். அதாவது ரூ. 42 ஆயிரத்து 700 கொடுத்தால் டாக்டர் பட்டம் கிடைக்கும். ரூ. 15,000 கொடுத்தால் ஆர்.எம்.பி. பட்டம் தரப்படும். கூடுதலாக ரூ. 10 ஆயிரம் சேர்த்து 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எம்.டி. பட்டம் கிடைத்து விடும்.
ஆனால் பட்டங்களைப் பெறுவதற்கு முன்பு ஒரு வார காலம் பயிற்சி கொடுப்பார் மணி. இப்படியாக கடந்த 3 வருடமாக பல போலி டாக்டர்களை உருவாக்கி வந்துள்ளார் மணி. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் மணியால் உருவாக்கப்பட்டுள்ளனராம்.
இந்த போலி டாக்டர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மணியையும், அவரது போலி பல்கலைக்கழகத்தில் மேலாளராக இருந்து வந்த மாதவன் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நான் என்ன தப்பு செய்தேன் - மணி
தான் செய்ததில் தவறே இல்லை, வில்சன் செய்ததுதான் தவறு என்று போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் மணி.
இதுகுறித்து அவர் கொடுத்துள்ள வாக்குமூலம்.
உசிலம்பட்டி கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனக்கு சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. இதையடுத்து அமெரிக்காவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் திரவ வடிவிலான மருந்துகளை இறக்குமதி செய்தேன். அவற்றை குறிப்பிட்ட விகிதத்தில், தண்ணீரில் கலந்து குடித்தால், ரத்த விருத்தியாகும் எனக் கூறி விற்பனை செய்தேன்.
அதற்கு நல்ல பலன் கிடைத்தது. விற்பனையும் அமோகமாக இருந்தது. நான் ஏற்னவே செல் தெரபியில் பி.எச்.டி. வாங்கியுள்ளதால், டாக்டர் பட்டத்தைப் போட்டுக் கொண்டு மருத்துவத் தொழிலை ஆரம்பித்தேன்.
எனது வீட்டின் ஒரு பகுதியை மாற்றுமுறை மருத்துவப் பல்கலைக்கழகமாக மாற்றினேன். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செல் தெரபி என பெயரும் வைத்துக் கொண்டேன். கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின் என்ற நிறுவனத்துடன் உடன்பாடு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் போலியான டாக்டர் பட்டங்களைத் தர ஆரம்பித்தேன்.
பிளஸ்டூ படித்தவர்கள் டாக்டர் ஆகலாம் என நான் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு பலரும் விண்ணப்பித்தனர். குமரி மாவட்டத்தினர்தான் இதில் அதிகம்.
அவர்களிடம் குறைந்தது ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, பத்து நாள் பயிற்சி கொடுத்து விட்டு, கொடுத்த பணத்திற்கேற்ப எம்.டி. உள்ளிட்ட பட்டங்களைக் கொடுப்பேன்.
என்னிடம் பட்டம் பெற்றவர்தான் வில்சன். அவர் ஒரு கொத்தனார் என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. அதை அவர் என்னிடம் சொல்லவும் இல்லை. என்னிடம் பயிற்சிக்கு வருபவர்களுக்கு நான் எம்.பி.பி.எஸ். என போர்டு மாட்டிக் கொள்ளாதீர்கள், ஊசி போடாதீர்கள் என ஸ்ட்ரிக்டாக சொல்லியுள்ளேன். ஆனால் அதை மீறி வில்சன் செயல்பட்டதால்தான் அவர் மாட்டிக் கொண்டார், நானும் மாட்டி விட்டேன்.
வில்சன் தப்பு செய்தார், மாட்டிக் கொண்டார். ஆனால் நான் தவறு செய்யவில்லை. என் மீது எந்தத் தப்பும் கிடையாது. நான் நிரபராதி, அதை கோர்ட்டில் நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார் மணி.
போலி பல்கலைக்கழகம் நடத்தி பல போலி டாக்டர்களை உருவாக்கியுள்ள மணியின் செயல் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications