ஹெல்மட்: கெடுபிடி வேண்டாம்-கருணாநிதி உத்தரவு
சென்னை:இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவை மிகவும் கெடுபிடியாக அமல்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறையினருக்கு முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.
ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தின் ஆறு மாநகராட்சிகளிலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை மறுத்து விட்டன.
இதையடுத்து 1ம் தேதி முதல் ஹெல்மட் அணியும் நடைமுறை அமலுக்கு வந்தது. காவல்துறையினர் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போலீஸாரிடம் சிக்கி அபராதம் கட்டினர். பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
அரசின் இந்த உத்தரவு மற்றும் காவல்துறையின் கடுமையான நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. அரசு போதிய கால அவகாசம் தராமல் அவசரம் அவசரமாக இந்த நடவடிக்கைய எடுத்துள்ளதாக மக்கள் குமுறினர். மேலும் தரமான ஹெல்மட் கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும் அதிக விலைக்கு அவை விற்று வருவதாலும் மக்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
ஹெல்மட் அணியாமல் செல்வோரிடம் அபராதம் செலுத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு தொடருவது என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் கருணாநிதிக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
அவற்றைப் பரிசீலித்த முதல்வர், ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், உயிர்ப் பாதுகாப்புக்காகவும் ஒரு தேவை என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தி அதனால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது என போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மட் அணியாதவர்களைப் பார்த்ததும் ஏதோ கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்தது போல போலீஸார் பாய்ந்து பாய்ந்து பிடித்து அபராதத்தைக் கறந்த நிலைக்கு முதல்வரின் இந்த அறிவுரை முற்றுப்புள்ளி வைக்கும் என்று பொதுமக்கள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications