அதிமுகவை போல திமுக அராஜகவன்முறையில் ஈடுபட்டதில்லை-அன்பழகன்
சென்னை:அதிமுக ஆட்சியில் திமுகவினர் மீது பொய் வழக்குகள் போட்டபோதும், லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தியபோதும் அவற்றை எதிர்த்து திமுகவினர் ஒருபோதும் அராஜக, வன்முறையில் ஈடுபட்டதில்லை என்று நிதியமைச்சர் க.அன்பழகன் கூறியுள்ளார்.
நேற்றைய அதிமுகவினரின் போராட்டம் குறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோடநாடு மாளிகை, ஜெயலலிதா, சசிகலா கூட்டுப் பொறுப்பில் இருக்கிறது என்பதை முதல்வர் கருணாநிதி ஆதாரத்துடன் வெளியிட்டவுடன், தான் உண்மையை மறைத்து பேசியது அம்பலமாகி விட்டது என்பதை உணர்ந்து, அதை திசை திருப்புவதற்காக, தன் கட்சிக்காரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக,
தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறப் போவதாக ஒரு வதந்தியை அவர்களே பரப்பி, அவரது கட்சிக்காரர்களை எல்லாம் அந்த வீட்டின் முன் குவித்து முதல்வருக்கும், அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பச் செய்து, அதை பத்திரிக்கைச் செய்தியாக்கி விளம்பரப்படுத்தி ஜெயலலிதா பித்தலாட்ட அரசியலை நடத்துகிறார்.
வருமான வரித்துறை மத்திய அரசின் பொறுப்பில் உள்ள துறை. முதல்வரின் பொறுப்பில் உள்ள துறை அல்ல. யாரிடத்தில் நிதி முறைகேடாக சேர்ந்திருந்தாலும், சொத்து சேர்ந்திருந்தாலும் அவர்களிடம் சோதனை நடத்த வருமான வரித்துறையினருக்கு அதிகாரம் உண்டு.
இப்போது ஜெயலலிதா வீட்டிலோ அல்லது அவருக்குச் சொந்தமான வேறு இடத்திலோ சோதனை நடத்தப்படவில்லை. ஜெயலலிதா, வருமான வரி சோதனை நடத்தப்படக் கூடாத அளவுக்கு நேர்மையானவேரா, நாணயமானவரோ கிடையாது.
கடந்த காலத்தில் ஜெயலலிதா அரசு நான் உள்பட திமுகவினர் பலர் மீது பொய் வழக்குகளை தொடுத்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை எல்லாம் விஜிலென்ஸ் துறையினர் மூலமாக சோதனையிட்டதை நாடு நன்றாக அறியும்.
ஜெயலலிதா அரசினால் அப்படிப்பட்ட சோதனை நடத்தப்பட்டபோது, திமுகவினர் எவரும் இதுபோன்ற ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவோ, போலீஸ் இன்ஸ்பெக்டரை உயிரோடு எரிக்க முயற்சித்தது போன்ற அராஜகங்களிலோ ஈடுபடவில்லை.
எனவே ஜெயலலிதாவும், அவரது கட்சியினரும் அரசியல் சூழ்ச்சியாக நடத்துகிற பொய் பிரசாரத்தையோ அல்லது முதல்வர் மீது பழி சுமத்துவதையோ பொதுமக்கள் நம்பி ஏமாறக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்முறைக் கலவரத்தைத் தூண்டும் உள்நோக்கத்தோடு சதி திட்டமிட்டு ஜெயலலிதா கட்சியினர் முதல்வர் கருணாநிதியின் உருவபொம்மையை எரிக்கிற அக்கிரமமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
திமுக தோழர்கள் இதைப் பார்த்து ஆத்திரமடையவோ, எதிர்ப்பைக் காட்டவோ முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications