கோடநாடு எஸ்டேட் கட்டடங்களைஇடிக்க கோரி கோர்ட்டில் வழக்கு
சென்னை:சர்ச்சைக்குரிய கோடநாடு எஸ்டேட்டுக்குள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோத்தகிரி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ராஜு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
கோடநாடு எஸ்டேட் 1994ம் ஆண்டு வரை கிரேக் ஜோன்ஸ் என்பவரிடம் இருந்தது. அதன் பின்னர் 1995ம் ஆண்டு ராதா வெங்கடாச்சலம், அமுதா, ஆண்டாள் ஆகியோர் வாங்கினர்.
அதன் பின்னர் இந்த எஸ்டேட்டை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வாங்கினர். எஸ்டேட்டை 7 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். நிலத்தின் பரப்பளவு 825 ஏக்கர் ஆகும்.
ராதா வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் நிலத்தை வாங்கும்போது இந்த எஸ்டேட்டில் தேயிலை தொழிற்சாலையும், பாழடைந்த கட்டடங்களும், தொழிலாளர் குடியிருப்பும் மட்டுமே இருந்தன
2700 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என ராதா வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் நகராட்சி நிர்வாக செயலாளரிடம் அனுமதி கேட்டனர். அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் உரிய காலத்திற்குள் கட்டடம் கட்டப்படவில்லை. இதனால் அனுமதி காலாவதியாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு சுதாகரன், இளவரசி ஆகியோரிடமிருந்து பங்குகளை ஜெயலலிதா வாங்கியுள்ளார். வருமான வரிக் கணக்கிலிருந்து இது தெரிய வருகிறது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் வசம் எஸ்டேட் வந்த பின்னர் இங்கு 90 அறைகள் அடங்கிய பெரிய மாளிகையை 2005ம் ஆண்டு கட்டியுள்ளனர். இது 45 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்தக் கட்டடம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை. நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டித் தள்ளியுள்ளனர். இது வனத்துறை சட்டத்துக்கு எதிரானது. மேலும் எஸ்டேட் உள்ளே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விதிமுறைகளை மீறி இவை நடந்துள்ளன. எனவே இந்த மாளிகையை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர், கோத்தகிரி பஞ்சாயத்து ஒன்றிய நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை எஸ்டேட்டுக்கான குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜு.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், அரசியல் காரணத்திற்காக எஸ்டேட் குறித்து தவறான, பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள். எஸ்டேட்டிற்குள் உள்ள கட்டடடங்கள் பல காலமாக அங்கு உள்ளவை. அவற்றுக்கு முறையான பிளான் உள்ளது.
எங்களுக்கு கோத்தகிரி பஞ்சாயத்து அனுப்பியுள்ள விளக்க நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன்.
இந்த மனு நேற்று நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதிமுக வக்கீல் ஜோதியும், அரசு தலைமை வழக்கறிஞர் விடுதலையும் வாதாடினர்.
இரு தரப்பு விவாதங்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமைக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications