பிற மொழிகளில் தேடல்- அனுராக் தாட்
இ-மெயிலுக்கு அடுத்தபடியாக இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் சேவை சர்ச் எனப்படும் தேடல் தான் (சுமார் 40 சதவீதம் பேர் இ-மெயிலுக்காகவும், 10 சதவீதம் பேர் சாட்டிங் செய்யவும் சுமார் 33 சதவீதத்தினர் தேடலுக்காகவும் இன்டர்நெட்டை பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் 90 சதவீதம் பேர் தங்கள் பிராந்தியம் தொடர்பான லோக்கல் விஷயம் குறித்துத் தான் தேடலில் இறங்குகின்றனர் என்கிறது ஐ-க்யூப் 2006 ஆய்வு)
இந்தியா தொடர்பான தேடலுக்கு இந்தியர்கள் அதிகம் நாடுவது கூகுளையும் யாகூவையும் தான். இந்தத் தளங்கள் நிறைய தகவல்களைத் தந்தாலும் அதில் பெரும்பாலானவை நமக்குத் தேவையில்லாத சமாச்சாரங்களாகவே இருப்பதைக் காண முடியும். தேவையில்லாத சமாச்சாரம் என்று சொல்வது, நம் பிராந்தியத்தை சாராத பிற பகுதிகளைச் சேர்ந்த விஷயங்கள் அதிகமாக இடம் பெறுவது தான்.
உதாரணத்துக்கு, இன்டர்நேசனல் ஸ்கூல் என்று கூகுளில் தேடிப் பார்த்தால் பெரிய பட்டியலே வரும். ஆனால், அதில் இந்தியாவைச் சேர்ந்த பள்ளிகள் மிகக் குறைவாக இருக்கும் அல்லது இருக்கவே இருக்காது.
இந்திய பள்ளிகளின் விவரங்களைப் பெற வேண்டுமானால் தேடலில் நாம் கொஞ்சம் நிபுணர்களாக இருக்க வேண்டும். இன்டர்நேசனல் ஸ்கூல்ஸ் இன் இன்டியா என்று தேட நம்மில் பலருக்கும் அனுபவம் இருக்காது.
இது போன்ற சமயங்களில் தான் நாடுகள் சார்ந்த சர்ச் என்ஜின்கள் உதவிக்கு வருகின்றன. அந்த வகையில் குருஜி.காம் முக்கியமானது. இந்தியா தொடர்பான தகவல்களை உலக வலையில் அள்ளிக் கொட்டும் இணையத் தளம் இது. இது இந்திய இணையத் தளங்களில் மட்டுமே தேடும் சர்ச் என்ஜின். இந்தியாவில் நுழைய கச்சிதமான சைபர் கேட் வே இது.
இந்தியா தொடர்பான டைரக்டரிகள் இன்டர்நெட்டில் ஏகப்பட்டவை உள்ளன. ஒன்இன்டியா.இன் கூட எக்ஸ்புளோர்.ஒன்இன்டியா.இன் என்ற டைரக்டரி சேவையை வழங்கி வருகிறது.
ஒன்இன்டியாவின் தலைமை செயல் அதிகாரி பி.ஜி.மகேஷ் சமீபத்தில் குருஜி.காம் தளத்தின் தலைமை செயல் அதிகாரி அனுராக் தாட்டுடன் இணையம், இந்திய மொழித் தளங்கள் குறித்து உரையாடினார். அதன் விவரம்:
பிஜி மகேஷ்- இந்தியா சார்ந்த சர்ச் என்ஜின்களுக்கு இணையத்தில் டிமாண்ட் இருக்கிறதா.. அப்படியானால் உங்கள் இணையத்துக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?
அனுராக்- இணையம் வழங்கும் சேவைகளில் சர்ச் என்ஜின்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டன. மிகச் சிறப்பான சர்ச் என்ஜின்களுக்கான தேவை தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே தான் இருக்கப் போகிறது. எல்லா நாடுகளையும் போல இந்தியாவிலும் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் தேவைகளும் வித்தியாசமாகவே உள்ளன. அவர்கள் இந்தியா தொடர்பான விஷயங்களையே அதிகம் தேடுகிறர்கள். இதனால் குருஜி.காம் தளத்துக்கு வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குருஜியை இந்திய வலைஞர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
பிஜி மகேஷ்- குருஜி க்யான் எப்படி ஆரம்பமானது..? இதற்கு எந்த வகையானவர்கள் விசிறிகளாக உள்ளனர்?
அனுராக்- இந்தியாவா.. குருஜி.காமுக்குத் தான் நன்றாகத் தெரியும் என்ற எங்கள் கொள்கை தான் குருஜி க்யானின் தத்துவமும். குருஜி க்யானில் இந்தியா குறித்து மிக இன்ட்ரஸ்டிங்கான தகவல்களை சேகரித்துத் தந்திருக்கிறோம். இந்திய வலைஞர்களுக்குத் தேவையான தகவல்களைத் தருவதற்கு இது ஒரு ஆரம்பம். குருஜி.காம் நேசர்கள் தான் குருஜி க்யானுக்கும் வருகை தருகிறார்கள். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. க்யானில் இன்னும் நிறைய தகவல்களை சேர்க்கப் போகிறோம்.
பிஜி மகேஷ்- இணையத்தில் இந்திய மொழித் தளங்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருக்கிறது. இந்திய மொழிகளில் தேடல் என்ற சாத்தியத்தைத் தந்த ஒரிரு தளங்களில் குருஜியும் ஒன்று. உங்கள் சர்ச் என்ஜின் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய மொழித் தேடலின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?
அனுராக்- ஆங்கிலம் தவிர்த்து இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என 5 மொழிகளில் தேடல் செய்யும் சேவையை குருஜி வழங்கி வருகிறது. மொழித் தேடல்களில் இன்டர்பேஸ் மிக முக்கியம் (தேடும் விஷயத்தை எப்படி அந்தந்த மொழியில் வார்த்தைகளாக டைப் செய்வது). நாங்கள் எங்கள் தளத்தில் இரு ஆப்ஷன்களைத் தந்துள்ளோம். ஒன்று பொனடிக் முறையில் கீ-போர்டில் தட்டச்சு செய்வது அல்லது ஆன்-ஸ்கிரீனில் உள்ள விர்சுவல் கீ போர்டை பயன்படுத்தி தேவையான எழுத்தை டைப் செய்வது. தேடலை மேலும் அர்த்தம் வாய்ந்ததாக மாற்ற பிழையை கண்டறியும் அந்தந்த மொழி ஸ்பெல்செக் வசதியையும் தந்துள்ளோம்.
இன்டர்நெட் ஒரு மாஸ் மீடியா. செய்தித் தாள், டிவி போன்ற வெகுஜன மீடியா மாதிரி இணையமும் இந்திய மொழிகளில் தான் பெரிய அளவில் வெல்ல முடியும். இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் இந்திய மொழிகளிலான கண்டென்ட் மிகுந்த முக்கியத்தும் பெரும். நல்ல இணையத் தளங்கள் இருந்தால் 46 சதவீத வலைஞர்கள் தங்கள் தாய் மொழியில் தான் படிக்க விரும்புவார்கள் என்கிறது வெப்துனியா நடத்திய சர்வே முடிவு.
பிஜி மகேஷ்- சமீபத்தில் ஒன்இன்டியாவின் மொழித் தளங்களும் யூனிகோடுக்கு மாறின. யூனிகோட் அல்லாத பிற எழுத்துருக்களை (பாண்ட்ஸ்) பயன்படுத்தும் தளங்கள் சர்ச் என்ஜின்களால் புறக்கணிக்கப்படுமா. யூனிகோட் எழுத்துரு கொண்ட தளங்களைத் தான் குருஜி.காம் போன்ற சர்ச் என்ஜின்கள் முதலில் தேடுமா?
அனுராக்- இந்திய மொழி இணையத்தில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை எழுத்துருக்களை இதுவரை தர-கட்டுப்பாடு செய்யாமல் இருப்பது தான். இப்போது இணையத்தில் ஏகப்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், யூனிகோட் ஸ்டான்டர்டுக்கு பெரும்பாலான தளங்கள் இன்னும் வரவில்லை. இந்த சிக்கலைத் தீர்க்க பிற எழுத்துருக்களை யூனிகோட் எழுத்துருவாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் குருஜி.காம் அந்தத் தளங்களிலும் சர்ச் செய்யும். இந்த தொழில்நுட்பத்தில் மேலும் நாங்கள் முதலீடுகள் செய்ய இருக்கிறோம்.
பிஜி மகேஷ்- குருஜி.காமில் தேடலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி எது?
இந்தி தான். ஆனால், அதை மிக நெருக்கமாகத் தொடர்வது தமிழும் தெலுங்கும்.
பிஜி மகேஷ்- இந்திய மொழி இணையத் தளங்களில் சர்ச் செய்யும்போது நீங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்கள் என்னென்ன?
அனுராக்- ஏகப்பட்ட சிக்கல்கள். முதல் பிரச்சனை எழுத்துரு தான். ஏகப்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுவதால் முதலில் அவற்றை தேடத்தக்க (சர்ச்சபிள்) ஒரு ஸ்டான்டர்டுக்குள் கொண்டு வந்து பின்னர் தேடலில் இறங்க வேண்டியுள்ளது. அடுத்தபடியாக உள்ள பிரச்சனை, இணையத் தளங்களின் இன்டக்சிங்.
அடுத்ததாக தேடலில் ஈடுபடும் வலைஞர்களுக்கான தட்டச்சு சிக்கலை தீர்ப்பது. ஆங்கிலம் தவிர்த்த பிற மொழியில் பொனடிக் முறையில் தட்டச்சு செய்வதை எளிதாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
பிஜி மகேஷ்- இந்தியாவில் எல்லா மொழிகளுக்கும் ஏகப்பட்ட யூனிகோட் எழுத்துருக்கள் உள்ளன. ஆனால், ஹைதராபாத் டிசிஎஸ் தவிர வேறு யாரும் இந்திய மொழி எழுத்துரு விஷயத்தில் முதலீடு ஏதும் செய்வதாகவே தெரியவில்லை. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அதிக ஆர்வம் காட்ட வேண்டியது அவசியம் என்று நினைக்கிறீர்களா?
அனுராக்- இணையத்தில் இந்திய மொழி கன்டென்ட் உருவாகவும், அது வளரவும் அரசாங்கத்தின் பங்கு மிக முக்கியமானது. இணையத்தில் அடுத்த அலை ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் இருந்து தான் வரப் போகிறது என்றால், முதலில் நாம் எழுத்துருகளை ஸ்டான்டர்ட் செய்ய வேண்டும். அனைவரும் ஏதாவது ஒரு வகையான எழுத்துருவுக்கு மாற வேண்டும். இன்டர்நெட்டை மேலும் எல்லா பகுதிகளுக்கும் பரப்ப மத்திய அரசு ஏகப்பட்ட முயற்சிகள் எடுத்து வருகிறது. அதே போல எழுத்துருக்களை ஸ்டான்டர்ட் செய்யும் விஷயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பிஜி மகேஷ்- சைட்மேப்.ஒஆர்ஜியில் (http://www.sitemaps.org/) கூறியுள்ளபடி புரோடோகால்களை ஏற்க கூகுள், யாகூ, எம்எஸ்என் ஆகியவை முன் வந்துள்ளன. இதன்மூலம் சர்ச் என்ஜின்களில் வெப் மாஸ்டர்கள் சப்மிட் செய்ய வேண்டிய வேலையை தவிர்க்க முடியும். இந்த தொழில்நுட்பத்தில் குருஜி.காம் ஏன் இன்னும் இறங்கவில்லை?
அனுராக்- இன்னும் 3 மாதத்தில் குருஜியும் இந்த முறையை அமலாக்கிவிடும்.
பிஜி மகேஷ்- குருஜி.காம் சிட்டி சர்ச் வசதியையும் வழங்குகிறது. இது எந்த வகையில் ஜஸ்ட்டயல்.காம் அல்லது ஐலகா.இன் ஆகியவற்றை விட மாறுபட்டது?
அனுராக்- இப்போதுள்ள சிட்டி சர்ச் என்ஜின்கள் அந்த ஊரில் உள்ள வர்த்தக அமைப்புகளைத் தான் பட்டியலிட்டுள்ளன. நாங்கள் இந்த விஷயத்தில் பரந்த பார்வையோடு இறங்கியுள்ளோம். படங்களுடன் கூடிய தேடலை சாத்தியமாக்கப் போகிறோம். எங்களுடையது தொழில்நுட்பரீதியிலான தேடலாக இருக்கும்.
பிஜி மகேஷ்- கூகுளைப் போல குருஜியிலும் பீட்டா லேபிளையே பார்க்க முடிகிறது. எப்போது உங்கள் முழு தயாரிப்பை (நான்-பீட்டா) வெளியிடப் போகிறீர்கள்?
அனுராக்- இந்த ஆண்டு இறுதியில் அது வெளியாகிவிடும்.
பிஜி மகேஷ்- ஒவ்வொரு வெப் மாஸ்டரும் சர்ச் என்ஜின்கள் மூலமாக தனக்குக் கிடைக்கும் டிராபிக்கை மனதில் வைத்து செயல்படுவது வழக்கம். சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் (SEO) என்பது மிக அவசியம். கூகுள், யாகூ ஆகியவை SEO friendly என பேச ஆரம்பித்துள்ளன. ஆனால், குருஜி அது குறித்து எதுவும் பேசவில்லையே. குருஜியின் முதல் பக்கத்தில் என் இணையத் தளம் வந்துவிட்டது என வெப்மாஸ்டர்கள் குதூகலிக்கும்போது தான் இந்திய சர்ச் என்ஜின் வென்றதாக கருத முடியும். இதனால் குருஜியும் எஸ்.இ.ஓ. குறித்து பேச வேண்டியது அவசியமல்லவாஅனுராக்- இது மிக அருமையான கேள்வி. இதுவரை நாங்கள் எங்கள் தயாரிப்பை மேம்படுத்துவதிலும் அதை பிரபலமாக்குவதிலும் கவனம் செலுத்தி வந்தோம். வெப்மாஸ்டர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவது மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். அதை நிச்சயம் செய்வோம்.
பிஜி மகேஷ்- அரசுத் துறைகளின் இணையத் தளங்களில் தேடலை வகை செய்ய யாகூ, கூகுள் ஆகியவற்றோடு பேசி வருகிறது நேனசனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் (என்ஐசி). இந்த விஷயத்தில் உங்களைப் போன்றவர்களை மத்திய அரசு புறக்கணிக்கக் காரணம் என்ன?
அனுராக்- நாங்களும் என்ஐசியுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களது தேவைகளை புரிந்து கொண்டிருக்கிறோம்.
பிஜி மகேஷ்- டொமைன்கள் தொடர்பான வர்த்தகம் மிகப் பெரியது. சுபிக்ஷா ரீடைல் ஸ்டோர் குறித்த ஒரு கட்டுரையை நான் கூகுளிலும் குருஜியிலும் தேடினேன். எதிர்பார்த்தது போலவே இரண்டிலும் முழுக்க வெவ்வேறான ரிசல்ட்கள் கிடைத்தன. ஆனால், குருஜியில் கிடைத்த முதல் ரிசல்ட் சுபிக்ஷா.காம். ஆனால், இது சுபிக்ஷா ஸ்டோர் தொடர்பானதல்ல. அது டொமைன்கள் விற்கும் தளம் சார்ந்த ரிசல்ட். இது போன்ற தேடல் முடிவுகளை சர்ச் என்ஜின் நிராகரிக்க வேண்டுமல்லவா?
அனுராக்- முதலில் இதைச் சுட்டிக் காட்டியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குறையை நிச்சயம் களைவோம். டொமைன் பார்க்கிங் மிகப் பெரிய பிஸினஸ். பெரும்பாலான நேரங்களில் இந்த டொமைன்கள் தான் நிறுவனத்தின் வெப்சைட்களாக இருக்கின்றன. பின்னர் ரினீவல் செய்யப்படாத நிலையில் விடப்படுகின்றன. இவ்வாறு காலாவதி (எக்ஸ்பயரி) ஆகிவிட்ட டொமைன்களை அடையாளம் காண்பது என்பது கொஞ்சம் சிக்கலானது. இது போன்ற டொமைன்களை நாங்கள் முடிந்தவரை தவிர்க்கிறோம் அல்லது சர்ச் ரிசல்ட் பட்டியலில் கடைசிக்குத் தள்ளப் பார்க்கிறோம்.
பிஜி மகேஷ்- கூகுளைப் போல சைட்களை தடை செய்யும் பாலிஸி உங்களிடமும் உண்டா, அது எந்த அளவுக்கு சாத்தியமாகிறது?
அனுராக்- ஆம், நாங்களும் வீணான தகவல்களைத் தரும் இணையத் தளங்களை நிராகரிக்கிறோம். அதே போல சர்ச் ரிசல்ட்டில் முக்கியம் இடம் பிடிக்க கீ-வேர்ட் ஸ்டப்பிங், குளோக்கிங், பார்க்கிடு டொமைன்கள் ஆகியவற்றை தவிர்க்கிறோம். மேலும் குருஜியால் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட சைட்களின் பட்டியலும் வைத்திருக்கிறோம்.
பிஜி மகேஷ்- பி சீரிசில் எப்போது இறங்கப் போகிறீர்கள், எவ்வளவு பணம் திரட்டப் போகிறீர்கள்?
அனுராக்-இன்னும் சில மாதங்களில்.. 10 மில்லியன் டாலர்கள் திரட்ட திட்டமிட்டிருக்கிறோம்.












Click it and Unblock the Notifications