பிரதீபா பாட்டீல்: ஆதரவு கோரினார் பிரதமர்-நிராகரித்தார் வாஜ்பாய்
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவு தருமாறு மாஜி பிரதமர் வாஜ்பாயிடம் பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இது காலம் கடந்த கோரிக்கை என வாஜ்பாய் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸ்-இடதுசாரிக் கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ராஜஸ்தான் கவர்னர் பிரதீபா பாட்டீல் நிறுத்தப்படவுள்ளார். 72 வயதான பிரதீபா தான் இந்திய அரசியல் வரலாற்றில் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு போட்டியிடும் முதல் பெண் ஆவார்.
பாஜக சார்பில் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நிறுத்தாமல் சுயேச்சையாக நிறுத்தினால் மதசார்பற்ற மூன்றாவது அணியின் ஆதரவும் கிடைக்கும் என பாஜக நினைக்கிறது. இதனால் இவர் சுயேச்சையாக நிற்கவுள்ளார்.
இந் நிலையில் ஷெகாவத்தின் அதே ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த பிரதீபாவை நிறுத்தி செக் வைத்துள்ளது காங்கிரஸ். மேலும் பிரதீபாவின் கணவரின் பூர்வீகமும் பைரோன்சிங்கின் சொந்த மாநிலமான ராஜஸ்தான் தான்.
ஆனால், பிரதீபா பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிரத்தில். இதனால் பாஜக கூட்டணியில் இருந்தாலும் பிரதீபாவை ஆதரிக்கத் தயாராகிவிட்டது சிவசேனா. மராட்டிய பெண்ணை ஆதரிக்க வேண்டியது கடமை என சிவசேனை கூறியுள்ளது. இதன்மூலம் ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ்.
இந் நிலையில் பிரதீபாவுக்கு ஆதரவு திரட்டும் வேலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். அதே போல முன்னாள் பிரதமர்கள் குஜ்ரால், விபிசிங் ஆகியோரும் பிரதீபாவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவு கோரினார் பிரதமர்.
அப்போது வாஜ்பாய் கூறுகையில், பிரதீபா பாட்டீல் பெயரை அறிவிக்கும் முன் இதுகுறித்து பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது காலம் கடந்துவிட்டது. என்றாலும் கட்சித் தலைவர்களிடம் பேசி விட்டு முடிவு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமரின் கோரிக்கையை பாஜக என்பது சந்தேகம் தான். பாஜகவின் மூத்த தலைவர்கள் காங்கிரஸின் இந்த முடிவை எதிர்த்துள்ளனர்.
அனைவரும் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் கதவை காங்கிரஸ் அடைத்துவிட்டது என காங்கிரஸை பாஜக குறை கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
