இலங்கையில் தமிழ்நெட் இணையதளம் முடக்கம்
கொழும்பு:விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ்நெட்.காம் இணைய தளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளது. இதற்கு சர்வதேச பத்திரிக்கை சுதந்திர அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பான செய்திகள் www.tamilnet.com இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இந்த இணையதளத்தை இலங்கையில் முடக்கி வைக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில், இண்டர்நெட் சேவையை வழங்கி வரும் மலேசியாவைச் சேர்ந்த டெலிகாம் மலேசியாவின் ஒரு பிரிவான டயலாக் டெலிகாம் (இதுதான் இலங்கையின் முன்னணி செல்போன் நிறுவனமாகும்), நிறுவனம் இன்று முதல் தமிழ்நெட் இணையதளத்தை முடக்கி வைத்துள்ளது. அரசின் உத்தரவின் பேரில் இந்த இணையதளத்தை முடக்கி வைத்திருப்பதாக அது கூறியுள்ளது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு எல்லைகளற்ற சர்வதேச பத்திரிக்கை சுதந்திரத்திற்கான நிருபர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வரும் இனப் போர் குறித்த முழுமையான தகவல்களை, செய்திகளை தமிழ்நெட்தான் உலக சமுதாயத்திற்கு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் நெட் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பதும், அதை தணிக்கை செய்ய முயலுவதும் கண்டனத்துக்குரியது. இந்த நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நெட் மீதான இலங்கை அரசின் நடவடிக்கை புதிதல்ல. கடந்த 2005ம் ஆண்டு இணையதளத்தின் ஆசிரியர் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மீடியா அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யாபா கூறுகையில், அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அவர்.
மற்றொரு அமைச்சரோ, சிலரை வைத்து தமிழ்நெட்டுக்குள் ஊடுறுவி அங்குள்ள தகவல்களை அழிக்க ஆசைப்படுகிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார்.
ஆனால் டயலாக் நிறுவனமோ அரசு சொல்லித்தான் தமிழ்நெட்டை முடக்கியதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதிகளில் இலங்கை படைகள் கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த்த தாக்குதல்கள் குறித்தும், இலங்கைப் படையினரின் அத்துமீறல்கள், அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்த உண்மையான, முழுமையான தகவல்கள், புகைப்படங்களை வெளியுலகினர் அறிந்து விடக் கூடாது என்ற நோக்கில்தான் தமிழ்நெட் இணையதளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அரசின் கடுமையான கெடுபிடிகள் காரணமாக, போர் நடக்கும் பகுதிகளுக்கு நீண்ட காலமாகவே செய்தியாளர்கள் செல்வதற்கு அனுமதி தரப்படுவதில்லை. மேலும், பல தமிழ் நாளிதழ்கள் கொழும்பிலிருந்து செயல்பட முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications