உலகையே திரும்பி பார்க்க வைக்கும் டெக்னாலஜி.. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்! மோடி தொடங்கி வைத்தார்
சண்டிகர்: நாட்டிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் முதல் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் இருந்து இந்த ரயில் தனது சேவையை தொடங்கியது. இதன் மூலம் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில்களை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியன் ரயில்வே பல்வேறு புதுமைகளை கொண்டு வருகிறது. பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல வந்தே பாரத் தொடங்கி பல புதிய ரயில்களும் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி இப்போது நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது..

ஹைட்ரஜன் ரயில்
இந்த ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவின் ஜிந்த் - சோனிபத் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். செலவு குறைவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கார்பன் எமிஷன் குறைப்பு என பல வழிகளில் இந்த ஹைட்ரஜன் ரயில் முக்கியமானதாக இருக்கும். மேலும், நாட்டின் க்ரீன் எனர்ஜி மற்றும் நெட் ஜீரோ கார்பன் எமிஷன் டார்கெட்டை அடையவும் இது உதவும் என தெரிகிறது.
இந்த திட்டத்திற்காக ஜிந்த் - சோனிபத் ரயில் பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜன் எரிபொருளை சேமித்து, அதை நிரப்புவதற்காக ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பு மையம் ஜிந்திலில் தான் இருக்கிறது. இதன் காரணமாகவே அங்கிருந்து ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது.ஹை பிரஷரில் சேமித்து வைக்கப்படும் ஹைட்ரஜன் கேஸ் ரயிலுக்கு செலுத்தப்படும்!
இந்தியாவுக்கு பெருமை
ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் என்பது அதிநவீன தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இப்போது ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இன்னுமே தொடக்க நிலையில் தான் உள்ளது. தற்போது ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கி வரும் நிலையில், இந்தியாவும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.
எப்படி இயங்குகிறது!
இதில் ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இடையிலான கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்படும்போது மின்சாரம் உருவாகும் நிலையில், அதுவே ரயிலை இயக்க பயன்படும். இந்த ஒட்டுமொத்த பிராசஸில் ரயில்களில் இருந்து நீராவி மட்டுமே கழிவாக வெளியேறும். இதனால் டீசல் ரயில்களுடன் ஒப்பிடும்போது இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
ரயிலுக்கான ஹைட்ரஜன் நிரப்பு பணிகளுக்காக பிரத்தியேக ஹைட்ரஜன் கம்பிரஷன் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹைட்ரஜன் கசிவு கண்டறியும் கருவிகள், தீ விபத்து எச்சரிக்கை சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
உரிய நடவடிக்கை
ரயிலின் பராமரிப்பு பணிகளுக்காக டெல்லி ஷகுர்பஸ்தி பகுதியில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் நிரப்பு மையம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்ள பயிற்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வழக்கமான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அது இந்திய ரயிவ்வே துறைக்கு மிக பெரிய வெற்றியாக அமையும். மேலும், எதிர்காலத்தில் பல வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் திட்டங்களுக்கும் இது அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















Click it and Unblock the Notifications