அதிமுக வேட்பாளரை கைது செய்யக் கோரி வழக்கு
மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்லூர் ராஜூ மீதான கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். இன்று இத்தொகுதியில் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இந்த நிலையில், மதிச்சயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்து வெங்கடேஷ், செல்லூர் ராஜூவைக் கைது செய்யக் கோரி வழக்குப் போட்டுள்ளார்.
அதில், மதுரை மேற்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் செல்லூர் ராஜூ, உள்கட்சி தகராறு காரணமாக 41வது வட்ட செயலாளர் பால் பாண்டியன் என்பவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் கடந்த 2004ம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ராஜூ 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பால்பாண்டியன், தனக்கு எதிராக கட்சி மேலிடத்தில் புகார் செய்ததால் அவரை ராஜு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டபோது தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி வழக்கை ராஜூ வழக்கையும், விசாரணையையும் முடக்கி வைத்தார்.
கொலை குற்றம் சாட்டப்பட்ட ராஜூ, மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் மூலம் அத்தொகுதியில் அச்சுறுத்தலும் பய உணர்வும் ஏற்படுகிறது.
எனவே செல்லூர் ராஜு மீதான வழக்கை சிபிசிஐடி விசாரித்து அவரைக் கைது செய்ய வேண்டும். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் முத்துவெங்கடேஷ்.












Click it and Unblock the Notifications