பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொன்முடி-மீண்டும் பாயும் ராமதாஸ்!
சென்னை:
சுய நிதி பொறியியல் கல்லூரிகள் மக்களிடமிருந்து பணத்தைக் கறப்பது தெள்ள் தெளிவாக தெரியும் நிலையில், மாணவர்களிடமிருந்து புகார்கள் வர வேண்டும் என அரசு எதிர்பார்ப்பது ஏன். பொறுப்பைத் தட்டிக் கழிப்பது போல அமைச்சர் பொன்முடி பேசுவது ஏன் என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
தமிழகத்தில் உயர் கல்வி வியாபாரமயமாகி விட்டது. சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் பணம் கறந்து வருகின்றன. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருந்தார். அதில் ராமதாஸை வாரியிருந்தார் பொன்முடி.
மருத்துவக் கல்லூரிகளின் கட்டுப்பாடு மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணியிடம் தான் உள்ளது. தனது கோரிக்கைக்காக ராமதாஸ் டெல்லியில் போய் போராட்டம் நடத்தினால் அதில் திமுகவும் பங்கேற்கும் என பொன்முடி தாக்கியிருந்தார்.
இதற்கு ராமதாஸ் பதிலடி தந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அதிக கட்டணத்தை வசூலிக்கும் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரமும் உள்ளது. அப்படிப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் அமைச்சர் பொன்முடி, புகார் வரவில்லை, எனவே நடவடிக்கை எடுக்க முடியாது என்று பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறார்.
தேவையற்ற வார்த்தைப் போரில் ஈடுபடுகிறார் பொன்முடி. உயர் கல்வித்துறை செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் முதல்வரின் அனுமதி பெற்று கோட்டைக்குள் போராட்டம் நடத்துவேன் என்று கூறியிருந்தேன்.
இதற்குப் பதிலளித்துள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல, நான் போராட வேண்டிய இடம் டெல்லி என்று கூறியுள்ளார். தேவையில்லாமல் இந்திய மருத்து கவுன்சில் போன்ற நிறுவனங்களையும் வம்புக்கு இழுத்துள்ளார்.
அவர் கூறுகிற மத்திய அரசின் நிறுவனங்களுக்கும், சுயநிதிக் கல்லூரிகளின் கட்டண நிர்ணயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் கட்டாய நிதி வசூலிக்கும் கல்வி நிறுவனங்களைத் தடுப்பதற்கும் மத்திய அரசு நிறுவனங்களின் பணிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
1992ம் ஆண்டு அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்டத்தை தமிழக அரசுதான் கொண்டு வந்தது. ஆனால் அது தெரியாமல், மாநில அரசுகளுக்கு இதுதொடர்பாக அதிகாரம் இல்லை என்று அமைச்சர் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.
சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் நீங்கள், அதை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் நீங்கள். எனவே அதை அமல்படுத்தி நடவடிககை எடுங்கள் என்று கூறினால் அப்போது மட்டும் அதிகாரம் இல்லை என்று கூறி பொறுப்பைத் தட்டிக் கழிப்பது போல பேசுவது என்ன நியாயம்.
இருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள் என்றால் தேவையில்லாமல் மத்திய சுகாதாரத் துறையை வம்புக்கு இழுத்துப் போராடத் தயாரா என்று அமைச்சர் விதண்டாவாதம் செய்திருக்கிறார். இப்படி தேவையில்லாமல் பேசி விட்டு கூட்டணி பற்றியும் பேசியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து புகார்கள் வந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் கூறுகிறார். இதுதொடர்பாக பலமுறை முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார்கள் போயுள்ளன. அதில் நடவடிக்கை இல்லாத காரணத்தால்தான் உயர்நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
எனவே அரசுக்கு எதுவுமே தெரியாது என்று அமைச்சர் சொல்வது சுத்தப் பொய். யாரும் புகார் கொடுக்கவில்லை என்றால், நாட்டில் நடந்து கொண்டிருக்கிற அக்கிரமங்களையெல்லாம் ஒரு மக்கள் நல அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா. புகார் கொடுக்கவில்லை என்பதற்காக வேறு எந்த விஷயத்திலும் இந்த அரசு தலையிடவில்லையா, நடவடிக்கை எடுக்கவில்லையா.
இதற்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று ஏன் காத்திருக்க வேண்டும். இருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மத்திய அரசை நோக்கி கையைக் காட்டி திசை திருப்புவது எந்த வகையில் நியாயம்.
மத்திய அரசு ஏதோ ஏழு கடல் தாண்டி இருப்பதைப் போல அமைச்சர் பேசியிருக்கிறார். மத்திய அரசுக்கும், இந்த மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அமைச்சர் வேண்டுமானால் பேசலாம், ஆனால் இதை மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications