கேப் கேனவரல் ஆகும் அந்தமான்!
கொச்சி:அமெரிக்காவின் கேப் கேனவரல் போல, இந்தியாவின் அந்தமான் அல்லது ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஓடங்களை செலுத்தும், இறங்கும் வசதி கொண்ட மையத்தை உருவாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவைப் போல விண்வெளி ஓடங்களை உருவாக்கும் திட்டத்தில் இஸ்ரோ உள்ளது. ரீயூசபிள் செயற்கைக்கோள் செலுத்து வாகனம் (ஆர்.எஸ்.எல்.வி) என்று இதற்கு இஸ்ரோ பெயரிட்டுள்ளது.இந்த வகை ராக்கெட்டுக்களை வடிவமைப்பதில் வெற்றி பெற்றுள்ள இஸ்ரோ அடுத்த கட்டமாக இவற்றை உருவாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கவுள்ளது.
இந்தியாவின் ஆர்.எஸ்.எல்.வி, விமானம் மற்றும் ராக்கெட் ஆகியவை இணைந்ததாக இருக்கும்.
இரு கட்டங்களாக இதன் வடிவம் இருக்கும். இதன் மேல் பகுதி மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆள் இல்லாத இந்த விண்வெளி ஓடங்கள், வழக்கமான ராக்கெட்டுகள் மூலம் ஏவப்படும். ஆனால் தரையிறங்கும்போது விண்வெளி ஓடமாக இது மாறியிருக்கும்.
இந்த வகை விண்வெளி ஓடங்களை ஏவுவதற்கும், தரையிறங்குவதற்கும் வசதியாக அந்தமான் அல்லது ஸ்ரீஹரிகோட்டா ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் ஸ்பேஸ்போர்ட்டை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அனேகமாக இது அந்தமானில் அமைக்கப்படும் என்று தெரிகிறது.
அமெரிக்காவின் கேப் கேனவரல் போல இந்தியாவின் ஸ்பேஸ்போர்ட் அமையும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications