கருணாநிதிக்கு நன்றி: சென்னை பிரமாண்டமகளிர் பேரணியில் பிரதீபா பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் பிரமாண்டப் பேரணி நடந்தது. இதை முதல்வர் கருணாநிதியுடன், தனி மேடையில் இருந்தபடி பிரதீபா பாட்டீல் பார்வையிட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் முறையாக பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதைப் பாராட்டியும், அவரை தேர்வு செய்த சோனியா காந்தியைப் பாராட்டியும் திமுக சார்பில் சென்னையில் நேற்று பிரமாண்டமான மகளிர் பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெரும் திரளான பெண்கள் சென்னையில் கூடினர்.

மாலை 4.45 மணிக்கு பேரணி தொடங்கியது. கவிஞர் கனிமொழி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின் முன்வரிசையில் கனிமொழி, முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள் பூங்கோதை, தமிழரசி, மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன், திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்டோர் அணிவகுத்து நடந்து வந்தனர்.

பேரணியின் முன்பாக 12 குதிரைகளில் திமுக மகளிர் அணியினர் கொடிபிடித்தபடி சென்றனர். தொடர்ந்து காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய பாரதம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மகளிர் அணியினர் தனித் தனி அணியாக சென்றனர்.

அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் இருந்தபடி பேரணியை முதல்வர் கருணாநிதியும், பிரதீபா பாட்டீலும் பார்வையிட்டனர். அவர்களுடன் தமிழக காங்கிரஸுக்கான பொறுப்பாளர் வீரப்ப மொய்லியும் இருந்து ஊர்வலத்தைப் பார்வையிட்டார்.

இந்த மேடைக்கு அருகே போடப்பட்டிருந்த இன்னொரு மேடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், தி.க. தலைவர் கி.வீரமணி, முதல்வரின் மனைவியார் தயாளு அம்மாள், அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா, ரகுபதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

வண்ண வண்ண உடை அணிந்து இளம் பெண்கள் முதல் 80 வயது பாட்டிகள் வரை ஊர்வலத்தில் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். முதல்வர், பிரதீபா பாட்டீல் இருந்த மேடையை ஊர்வலம் கடந்து செல்ல கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆனது.

செங்கோட்டை வடிவில் வடிவமைக்கப்பட்டு லாரியில் கொண்டு வரப்பட்ட செட், அனைவரையும் கவர்ந்தது. மேளாதளம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஊர்வலத்தின் இடையே நடந்தது.

இந்த பிரமாண்டப் பேரணியைப் பார்த்த பிரதீபா பாட்டீல் மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக காணப்பட்டார். கைகளை அவ்வப்போது ஆட்டி ஊர்வலத்தினருக்கு உற்சாகம் கொடுத்தார்.

ஊர்வலத்தின் இடையே பிரதீபா பாட்டீல் பேசினார். அதேபோல முதல்வர் கருணாநிதியும் பேசினார். அவர்கள் பேசியபோது ஊர்வலம் நிறுத்தப்பட்டு, பேசி முடித்ததும் மீண்டும் தொடர்ந்தது.

பிரதீபா பாட்டீல் பேசுகையில், ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் திரண்டு வந்துள்ள பெண்கள் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பது மிகவும் பெருமையான விஷயம்.

உங்களுக்குப் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் என்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து சொல்லியுள்ளீர்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது பெண்களின் பங்குதான் முக்கியமாக இருந்தது.

மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று பெண்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். வெள்ளைக்காரர்களிடம் தடியடி, குண்டடி பட்டு ஆற்றிய பணிகள் மகத்தானவை.

எனது பிரசாரத்தை சென்னையிலிருந்து தொடங்குவதில் பெருமை அடைகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக தேர்வு செய்த தலைவர்கள், குறிப்பாக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த 45 ஆண்டுகளாக பல்வேறு தகுதிகளில் இந்த நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பணியாற்றியுள்ளேன். குடியரசுத் தலைவர் பதவிக்கான பொறுப்புகளை நன்கு அறிவேன் என்றார் பிரதீபா பாட்டீல்.

முதல்வர் கருணாநிதி பேசுகையில், குடியரசுத் தலைவர் பொறுப்பேற்று அந்த பொறுப்பை நடைமுறைப்படுத்துகின்ற நேரத்தில் நம்மை நிச்சயம் மறந்து விட மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இன்று இங்கு அணிவகுத்த பெண் குலத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அந்த நன்றியை வார்த்தை அளவில் இல்லாமல், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் பெண்களின் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அவரது ஆதரவு இருந்தது என்ற அளவிலே நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுதான் அவரிடம் நாங்கள் எதிர்பார்க்கின்ற பிரதியுபகாரம்.

ஜனநாயகத்தைக் காத்திட, சமூகப் பணி ஆற்றிட, அவர் இதுவரையில் ஏற்ற பொறுப்புகள் மூலமாக, அதற்கு ஏற்ற உரிய சான்றாக விளங்கியிருக்கிறார். பலமுறை அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அமைச்சராக இருந்து அரும்பணியாற்றியிருக்கிறார்.

இடையிலே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கூட, எதிர்க்கட்சித் தலைவர் என்றால் எவ்வளவு பொறுப்பாக பணியாற்ற வேண்டும் என்பதையும் நிரூபித்திருக்கின்றார்.

சமூகத் தொண்டாற்றியிருக்கிறார், பெண்கள் நலனுக்காக பாடுபட்டிருக்கிறார். இத்தனை இலக்கணங்களும் பொருந்திய இந்த அம்மையார் இந்தியாவினுடைய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பதும், அவர்களுக்கு நாம் இன்றைக்கு வழி கூட்டி அனுப்புவதும், பெருமையாகும் என்றார் கருணாநிதி.

ஊர்வலம் முடிய சிறிது நேரம் இருந்த நிலையில் பிரதீபா பாட்டீல் விடை பெற்றுச் சென்றார். அவர் கிளம்பும் முன்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களை முதல்வர் கருணாநிதி அவருக்கு அறிமுகப்படுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+