சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அரசின் சட்டம் செல்லும்-உயர்நீதிமன்றம்
சென்னை:தமிழக அரசின் 65 சதவீத இடஒதுக்கீடு தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும். இதுதொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தொழில் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம் இயற்றப்பட்டது. அதில், தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடத்தையும், சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடத்தையும் அரசுத் தர வேண்டும் என்ற முக்கிய ஷரத்து உள்ளது.
மேலும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், சேர்க்கை நடைபெற வேண்டும், நிர்வாக ஒதுக்கீட்டில் ஒற்றைச் சாளர முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டத்தின் முக்கியப் பிரிவுகள் கூறுகின்றன.
இவற்றை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என மே மாதம் அரசு உயர் கல்விச் செயலாளர் உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்தார். சுய நிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் என கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசின் இந்த உத்தரவையும், சட்டத்தில் உள்ள 3 முக்கிய சட்டப் பிரிவுகளையும் தடை செய்யக் கோரி பல்வேறு தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் அடங்கிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தனபாலன் முன்னிலையில் 5 நாட்கள் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு முடியும் வரை அண்ணா பல்கலைக்கழகம் ரேங்க் பட்டியலை வெளியிடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் ரேங்க் பட்டியலை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கவுன்சிலிங்கும் தாமதமாகலாம் என்று கருதப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி தனபாலன் தனது தீர்ப்பில், அரசு கொண்டு வந்த சட்டத்தின் 3 முக்கியப் பிரிவுகளும் செல்லும். மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசு பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் செல்லும்.
மாணவர் சேர்க்கை நடைமுறை கடந்த மே 13ம் தேதியே தொடங்கி விட்டது. ஆனால் மனுதாரர்கள் ஜூன் 13ம் தேதிதான் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த காலங்களில் சுய நிதிக் கல்லூரிகள் 16 பொறியியல் இடங்களை நிரப்ப முடியாமல் அரசிடமே சரண்டர் செய்துள்ளனர். எனவே சுய நிதிக் கல்லூரிகளின் இடங்களை அரசு பறிப்பதாக அவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.
மாணவர்களின் நலன் கருதியே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தைப் பின்பற்றியே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்ய எந்த அவசியமும், தேவையும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலையே அண்ணா பல்கலைக்கழகம் தனது ரேங்க் பட்டியலை வெளியிட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.
இதில் ஈரோடு அரவிந்த், கோவை பிரவீண்குமார், நாமக்கல் நித்யானந்தன், ஓசூர் கார்த்திகேயன், கன்னியாகுமரி ஜெரீன் சேகர், ராமநாதபுரம் தஸீன் நிலோபர் ஆகிர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் அரவிந்த் தவிர மற்றவர்கள் மருத்துவப் படிப்பிலும் முதல் ரேங்க் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வருகிற 9ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. மருத்துவக் கவுன்சிலிங் 8ம் தேதியுடன் முடிவடைகிறது.
ரேங்க் பட்டியலை www.annauniv.edu என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications