குண்டு பாலா வங்கிக் கணக்கில் ரூ. 17 லட்சம்
சிவகங்கை: சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டது தொடர்பாக சரணடைந்துள்ள என்ஜீனியர் பாலாவின் வங்கிக் கணக்கில் ரூ. 17 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29-ம் தேதி சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன், கார் குண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான மந்தக்காளை மற்றும் என்ஜீனியர் பாலா ஆகியோர் குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
பாலாதான் ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டு வெடிக்கும் வகையில் தயாரித்து அதை காரில் பொருத்த உதவியவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாலாவின் வங்கிக் கணக்கில் ரூ. 17 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணக்கிலிருந்து மாற்றப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
கொலைச் சதி திட்டத்தை செயல்படுத்தியதற்காக இந்தப் பணம் பாலாவுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே, இந்த வழக்கை வேறு திசையில் திருப்புவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்படவுள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து சிவகங்கையில் பரபரப்பு கிளம்பியது. கொலை செய்யப்பட்ட முருகனின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்படும் வரை இரு அதிகாரிகளையும் மாற்றக் கூடாது என்று கோரி பஸ் நிலையப் பகுதியில் கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications