நக்சல் வேட்டையில் விஜயக்குமார்-தேனி விரைந்தார்
சென்னை:தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் நடமாடும் நக்சலைட்டுக்களை ஒடுக்கும் பணியில் கூடுதல் டிஜிபியும், சிறப்பு கமாண்டோ படை அதிகாரியுமான விஜயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் கருணாநிதியின் உத்தரவைத் தொடர்ந்து அவர் தேனி மாவட்டத்திற்கு விரைந்துள்ளார்.
தமிழகத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்களிலேயே பொதுவாக நடமாடி வந்த நக்சலைட்டுகள் தற்போது தென் மாவட்டங்களுக்கு கிளை பரப்பத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை கரட்டு பகுதியில் 3 நக்சலைட்டுகள் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
![]() |
புதிதாக மக்கள் போர்ப்படை என்ற நக்சலைட் அமைப்பை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பில் சட்டம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்த இளைஞர்களை சேர்த்து வருகின்றனர். பெருமளவில் மாணவர்களும் இதில் சேர்ந்து வருகின்றனர்.
இவர்களை வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடனும் இந்த நக்சலைட்டுகள் இருந்தனர். இவர்களின் தலைமையிடம் மதுரையாக உள்ளது. தேனி மாவட்ட மலைப் பகுதிகளை தங்களது மறைவிடமாகவும், சதித் திட்டத்திற்குத் தேவையான வெடிகுண்டுகள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காகவும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கைதான மூன்று பேர் தவிர 7 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் ராஜா, காளிதாஸ், நவீன் பிரசாத், ரஞ்சித் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப்ப குதியில் நக்சலைட் வேட்டை நடந்தது.
அந்த சமயத்தில் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பியவர்கள்தான் ராஜா, காளிதாஸ், நவீன் பிரசாத் ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள்தான் தற்போது மதுரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய நக்சல் இயக்கத்தை நடத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த நக்சல் இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து கூடுதல் டிஜிபி விஜயக்குமாரை நக்சலைட் வேட்டைக்கான சிறப்பு அதிகாரியாக முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார்.
நேற்று விஜயக்குமார் முதல்வர் கருணாநிதியை சென்று சந்தித்துப் பேசினார். அப்போது நக்சல் ஒழிப்புப் பணியில் உடனடியாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு விஜயக்குமாருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து விஜயக்குமார் உடனடியாக மதுரைக்கு விமானம் மூலம் விரைந்தார். அதன் பின்னர் தேனிக்குச் சென்ற வைகை அணை விருந்தினர் மாளிகைக்குச் சென்று தங்கினர்.
இன்று முதல் விஜயக்குமார் தனது பணியைத் தொடங்குகிறார். முதலில் மாவட்ட எஸ்.பி.சுதாகர், விஜயக்குமாரை சந்தித்துப் பேசுகிறார். அதன் பின்னர் முருகமலை கரட்டுக்கு விஜயக்குமார் சென்று நக்சலைட்டுகள் பிடிபட்ட இடத்தைப் பார்வையிடுகிறார். பின்னர் நக்சலைட் வேட்டை தொடர்பாக காவல்துறையினருடன் ஆலோசித்து நடவடிக்கைகளை முடுக்கி விடவுள்ளார்.
தற்போது, மஞ்சளாறு அணைப் பகுதி, கோம்பை, பாலமலை, கலையாறு, பச்சகூமாச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இருப்பினும் முழுமையான வேட்டையாக இது இல்லை என்று கூறப்படுகிறது. காலையில் சென்று மாலையில் திரும்பி விடுவதாக வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பன் வேட்டையின்போதும் இப்படித்தான் செய்து கொண்டிருந்தனர். ஆனால் தேவாரம், விஜயக்குமார் ஆகியோர் அதிரடிப்படைத் தலைவர்களாக இருந்தபோது இந்த தேடுதல் வேட்டை மாற்றப்பட்டு வீரப்பன் கும்பல் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து போலீஸார் காட்டுக்குள் நீண்ட பயணத்தை மேற்கொண்டு அவர்களை வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.
அதே பாணியில் இங்கும் தேடுதல் வேட்டையை விஜயக்குமார் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வீரப்பனை படு சாமர்த்தியமாக ஏமாற்றி வேட்டையாடியவர் விஜயக்குமார். மேலும் அவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தபோதுதான் படு பயங்கரமான தாதா வீரமணியை என்கவுண்டர் மூலம் காவல்துறையினர் போட்டுத் தள்ளினர். எனவே நக்சலைட் வேட்டையில் இறங்கியுள்ள விஜயக்குமார், தேனி மாவட்ட மலைப் பகுதிகளை அவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பது நிச்சயம் என்று காவல்துறை வட்டாரத்தில் நம்பிக்கையுடன் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications