காங்கிரஸ் எப்படி வளரும்-சுதர்சனம் புலம்பல்
சென்னை:ஒரு வட்டார காங்கிரஸ் தலைவரை நியமிக்கக் கூட மாநிலத் தலைமைக்கு அதிகாரம் இல்லாதபோது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் எப்படி வளர முடியும் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பிற்பட்டோர் நலப் பிரிவு நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் சுதர்சனம் பேசுகையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் இருந்தது. அப்போது இழந்த ஆட்சியை நம்மால் மீண்டும் பெற முடியவில்லை.
தமிழக காங்கிரஸ் கட்சியில், ஒரு மாவட்டத் தலைவரையோ அல்லது வட்டத் தலைவரையோ கூட நியமிக்கும் அதிகாரம் இங்குள்ள தலைமைக்குக் கிடையாது. யாராவது தவறு செய்தால் அவர்களை நீக்கவும் அதிகாரம் கிடையாது. கட்சி மேலிடம்தான் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்க முடியும்.
இப்படி மாநிலத் தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்காமல், அனைத்து முடிவையும் மேலிடமே எடுப்பதற்குள் இங்கு பல சிறிய கட்சிகள் முளைத்து விடுகின்றன.
காங்கிரஸ் கட்சியில் காலம் காலமாக உழைத்தவனுக்கு, பதவி கொடுப்பதில்லை. ஆனால் நேற்று வந்தவர்கள் பதவி பெற்று உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்கிறார்கள். சிலர் கோட்டா அடிப்படையில் கூட பதவியை பெறுகிறார்கள். இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் கட்சி எப்படி வளரும் என்றார் சுதர்சனம்.












Click it and Unblock the Notifications