சுடு நீர் தராத ஹோட்டல்கள் மீது நடவடிக்கை:மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை:ஹோட்டல்களுக்கு சாப்பிட வருகிறவர்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரைத்தான் தர வேண்டும். அவ்வாறு தராத ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவை மூட உத்தரவிடப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னையின் வட பகுதிகளில் வயிற்றுப் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதையடுத்து சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை இணைந்து காலரா தடுப்பு குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின.
இக்கூட்டத்தில், மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரிபாதி, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை செயலாளர்கள், சென்னை மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் மழை நீர் மூலமாக பரவும் காலரா, வயிற்றுப் போக்கு, டைபாய்டு, டெங்கு, மஞ்சள் காமாலை, எலிக்காய்ச்சல் போன்றவை பரவும் வாய்ப்புகள் உள்ளன.
வட சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இந்த நோய் தாக்குதல் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவற்றைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகள் எடுத்துள்ளன.
குடிநீரை காய்ச்சி, வடி கட்டித்தான் குடிக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல ஹோட்டல்களில் சாப்பிட வருகிறவர்களுக்கு கொதிக்க வைத்து, ஆற வைத்த குடிநீரைத்தான் தர வேண்டும். இதைத் தராத ஹோட்டல்கள் மூடப்படும் என எச்சரித்துள்ளோம்.
இறைச்சிக் கடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் காலரா வந்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை.
வட சென்னையில் தற்போது காலரா பரவவில்லை. அங்கு பாதிக்கப்பட்ட அனைவருமே வயிற்றுப் போக்கினால் அவதிப்பட்டவர்கள்தான். அவர்களுக்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 316 பேரும், புறநகர்ப் பகுதிகளில் 91 பேரும் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 175 பேர் உடல் நலம் சரியாகி வீடு திரும்பி விட்டனர்.
சென்னை தவிர பிற மாவட்டங்களில் வயிற்றுப் போக்குப் பிரச்சினை இல்லை. மாம்பழம் அதிகம் உள்ள இடங்களில்தான் வயிற்றுப் போக்குப் பிரச்சினையும் அதிகம் இருக்கும்.
வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உடனடியாக வந்து விட்டால் ஓரிரு நாட்களில் உடல் நலம் சரியாகி வீடு திரும்பி விடலாம் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications