கபீல் கம்ப்யூட்டரில் பின் லேடன் பேச்சு:அல்கொய்தா குறித்த படம் கண்டுபிடிப்பு
டெல்லி:இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூர் டாக்டர் கபீல் அகமதுவின் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில், பின் லேடன் பேச்சு, அல்கொய்தா குறித்த திரைப்படம், ஈராக், செச்னியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகியவை குறித்த படம் இடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோ விமான நிலையம் மீது காருடன் சென்று மோதி அதை வெடிக்கச் செய்தபோது பலத்த தீக்காயங்களுடன் பிடிக்கப்பட்டார் கபீல் அகமது. முதலில் அவர் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர்தான் அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெங்களூர் போலீஸார் கபீல் அகமதுவின் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை சிக்கின.
ஹார்ட் டிஸ்க்கை சைபர் கிரைம் போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் கபீலுக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்புகளை நிரூபிக்கும் வகையிலான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
மொத்தம் 17 ஆயிரம் பைல்கள் அந்த டிஸ்க்கில் உள்ளன. அதில் உலகளாவிய தீவிரவாதத் தாக்குதலுக்கு அழைப்பு விடுக்கும் அல் கொய்தா அமைப்பின் பிரசாரப் படம் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.
இதுதவிர பின் லேடனின் சில பேச்சுக்களும் டிஸ்க்கில் உள்ளன. பல்வேறு முஸ்லீம் தலைவர்களின் அரபி மொழியில் அமைந்த சில உரையாடல்களும் அதில் உள்ளன.
செச்னியா, ஈராக்கில் முஸ்லீம்கள் பட்டு வரும் கொடுமைகள், அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை விவரிக்கும் காட்சிகளும் டிஸ்க்கில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2003ம் ஆண்டு அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒருவரை கபீல் சந்தித்துள்ளார். இருப்பினும் இதற்கு நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும், கபீலும், அவரது சகோதரர் சபீல் அகமதுவும் சேர்ந்துதான் கிளாஸ்கோ தாக்குதலைத் திட்டமிட்டிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை.
மேலும் கபீல், சபீல் ஆகியோரின் சதித் திட்டம் தொடர்பான ஆதாரம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய போலீஸார் வசமும் இதுவரை சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேபோல மற்றொரு டாக்டரான முகம்மது ஹனீப்புக்கு எதிராகவும் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது மொபைல் போனின் சிம் கார்டை அகமது சகோதரர்களுக்குக் கொடுத்தார் என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டுமே ஹனீப்புக்கு எதிராக உள்ளது. வேறு எந்தப் புகாரையும் நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இதற்கிடையே கபீல் அகமதுவின் நண்பர்கள் 6 பேரிடம் பெங்களூர் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஒரு காவல்துறை அதிகாரி கூறுகையில், அவர்கள் 6 பேரும் முஸ்லீம்கள், தப்லிகி ஜமாத்தை பின்பற்றுபவர்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு மே மாதம் கபீல் பெங்களூர் வந்திருந்தபோது அவருக்கு இவர்கள் 6 பேரும் இ மெயில் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் 6 பேரும் கபீலுக்கு மிக மிக நெருங்கியவர்கள். எனவே கபீலின் செயல்பாடுகள் குறித்து இவர்களுக்குத் தெரிந்திருக்கும் என நம்புகிறோம். இவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.
இதேபோல கபீல் அகமது கடந்த 2005 டிசம்பர் முதல் 2006 ஜூலை வரை பெங்களூரில் வேலை பார்த்து வந்த இன்போடெக் என்டர்பிரைசஸ் நிறுவனத்திலும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கபீலுக்கு வந்த இமெயில் முகவரிகளை வைத்து அவரின் கூட்டாளிகள் பெங்களூரில் மட்டுமல்லாது, ஹைதராபாத், மும்பையில் இருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விரைவில் இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதலுக்கும், பெங்களூருக்கும் உள்ள தொடர்புகள் குறித்த தெளிவான சூழல் உருவாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications