மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்
சென்னை:குடிபோதையில் மனைவியின் கழுத்தை கடித்துக் கொன்றார் கணவர்.
சென்னை கே.கே.நகரில் இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து(36), அவருடைய மனைவி தவமணி(30) இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு தனம்(12) என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் வீட்டிற்கு அருகே தவமணியின் பெற்றோர்களும் தங்கியிருந்தனர்.
தவமணிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் நேற்று தந்தையிடம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இந் நேரத்தில் வீட்டிலிருந்து தவமணியின் மூக்குத்தியை மாரிமுத்து அடகு வைத்து, அந்தப் பணத்தில் குடித்து விட்டு வந்தார்.
மாரிமுத்துவின் இந்த செயலால் கோபமடைந்த தவமணி சண்டையிட்டார். நன்றாக குடித்திருந்த மாரிமுத்து தவமணியை அடித்து உதைத்தார். பின்னர் கழுத்தை நெரித்தார். தவமணி சத்தம் போடாமல் இருக்க அவரது வாயில் துணியை வைத்து அடைத்து, கழுத்தை வெறியோடு கடித்தார். இதனால் தவமணி துடிதுடித்து இறந்தார்.
பின்னர் சுய நினைவுக்கு வந்த மாரிமுத்து கொலையை மறைக்கும் முயற்சியில் இறங்கினார். பிணத்தை எங்காவது புதைத்துவிட திட்டமிட்டு, அம்பத்தூரிலுள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்தார்.
அவர்களும் 10 பேருடன் ஒரு வேனில் வந்து பிணத்தை வெளியே எடுத்து சென்றனர். இதைப் பார்த்த தவமணியின் பெற்றோரும் மற்றவர்களும் பிணத்தை எடுத்து செல்ல விடாமல் தடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வருவதை அறிந்து மாரிமுத்துவின் உறவினர்கள் வேனில் தப்பிவிட்டனர்.
துணை கமிஷ்னர் மௌரியா தலைமையில் அங்கு வந்த போலீஸார் மாரிமுத்துவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications