15 வருடங்களாக தலைமறைவாக இருந்த நக்சல் தலைவன் சுந்தரமூர்த்தி!!
சென்னை:திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நக்சலைட் தலைவன் சுந்தரமூர்த்தி கடந்த 15 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். அவர் மீது பல கொலை மற்றும் குண்டுவைப்பு, மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெரியகுளம் வனப் பகுதியில் பிடிபட்ட நக்சலைட்டுகளைத் தொடர்ந்து தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் போலீஸார் அதிரடி வேட்டையைத் தொடங்கினர். வீரப்பனை வேட்டையாடிய கூடுதல் டிஜிபி விஜயக்குமார் தலைமையில் நக்சலைட் வேட்டை முடுக்கி விடப்பட்டது.தப்பி ஓடிய மற்ற நக்சலைட்டுகளைப் பிடிக்க தமிழகத்தின் பல பகுதிகளில் தீவிர வேட்டை நடந்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் முழுவதையும் போலீஸார் வலை போட்டு அலசினர்.
இந்த நிலையில்தான் திருப்பூர் கிச்சம்பாளையம் பகுதியில் நக்சலைட் தலைவன் சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன், கார்த்தி ஆகிய 3 பேர் கியூ பிரிவு போலீஸ் வசம் சிக்கினர்.
கைதான சுந்தரமூர்த்தி பிரபலமான நக்சலைட் ஆவார். கடந்த 15 வருடங்களாக இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
நக்சலைட்டுகளின் சொர்க்க பூமி என்ற பெயர் படைத்த தர்மபுரி மாவட்டம் ராமையன் பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் சுந்தரமூர்த்தி. சிறு வயதில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நக்சல் தலைவர் நக்சலைட் பாலனின் பேச்சுக்களைக் கேட்டு கேட்டு, நக்சலைட் இயக்கத்தின் மீது பற்று கொண்டார் சுந்தரமூர்த்தி.
1980ம் ஆண்டு பாலன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாக பங்கெடுக்க ஆரம்பித்தார் சுந்தரமூர்த்தி. 1986ம் ஆண்டு காரிமங்கலத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் மாணிக்கம் ஆகிய இருவரைக் கொலை செய்தார் சுந்தரமூர்த்தி.
இந்த இரட்டைக் கொலைதான் சுந்தரமூர்த்தியை வெளியுலகுக்கு அடையாளம் காட்டியது. அதன் பின்னர் தலைமறைவானார் சுந்தரமூர்த்தி.
1992ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டு என்பவரைக் கொலை செய்தார். போலீஸுக்கு உளவு சொன்னதற்காக பாண்டுவைத் தீர்த்துக் கட்டினார்.
இந்தக் கொலை வழக்கில் கைதான சுந்தரமூர்த்தி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் அவர் போலீஸ் பிடியில் சிக்கவே இல்லை.
அதே ஆண்டில், தர்மபுரியில் ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தார். இதுதொடர்பாக அவர் மீது தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2002ம் ஆண்டு இவர் மீது தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில், நக்சலைட் ஆயுதப் பயிற்சி முகாமை நடத்தியதற்காக பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது மனைவி சந்திரா மீதும் பொடா வழக்கு பாய்ந்தது. சந்திரா இதுவரை போலீஸ் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் கெடுபிடி அதிகரித்ததைத் தொடர்ந்து தனது கவனத்தை தேனி மாவட்டத்தின் பக்கம் திருப்பினார் சுந்தரமூர்த்தி. தேனி மாவட்டம் பெரியகுளம் மலைப் பகுதியில், ஆயுத பயிற்சி முகாமை நிறுவ முயன்றபோதுதான் அவரது தலைமையிலான கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது சுந்தரமூர்த்தியும் பிடிபட்டுள்ளார்.
இதுவரை தர்மபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த நக்சலைட்டுகள் முதல் முறையாக தென் மாவட்டத்தின் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஆனால் அதை முளையிலேயே கண்டுபிடித்து தடுத்துள்ளது காவல்துறை.












Click it and Unblock the Notifications