4 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி பிரிட்டன் அதிரடி
மாஸ்கோ:முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சாண்டர் லிட்வினென்கோ கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியை ஒப்படைக்க ரஷ்யா மறுத்து விட்டதால், நான்கு ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உளவாளி அலெக்சாண்டர் லித்வினென்கோ, லண்டனில் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து விசாரித்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸார், லித்வினென்கோ அருந்திய தேநீரில், பொலோனியம்-210 என்ற கதிரியக்கப் பொருள் கலக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து லித்வினென்கோ மரணம், கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பான முக்கியக் குற்றவாளியை தன்னிடம் ஒப்படைக்குமாறுவ இங்கிலாந்து கோரி வந்தது. ஆனால் அதை ஏற்க ரஷ்யா மறுத்து விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த இங்கிலாந்து, ரஷ்ய தூதரக அதிகாரிகள் நான்கு பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்பாண்ட் கூறுகையில், லித்வினென்கோ கொலை வழக்கு விசாரணையில், ரஷ்யா முழுமையாக ஒத்துழைக்கத் தவறி விட்டது என்று குற்றம் சாட்டினார்.
இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்தின் நடவடிக்கை தேவையில்லாதது, நியாயமற்றது, இதற்குத் தகுந்த பதிலடி தரப்படும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை கேலிக்கூத்தானது, இரட்டை வேடம் போடுகிறது இங்கிலாந்து என ரஷ்ய பத்திரிக்கைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கோமர்சான்ட் என்ற பத்திரிக்கையில், வரலாறு காணாத தூதரகப் போரில் ரஷ்யாவும், இங்கிலாந்தும் குதித்துள்ளன. இங்கிலாந்து இரட்டை வேடம் போடுகிறது.
குற்றவாளிகளை பிற நாடுகளிடம் ஒப்படைப்பதற்கு ரஷ்ய சட்டத்தில் வழி இல்லை. இதைப் புரிந்து கொள்ளவில்லை இங்கிலாந்து. மேலும், இதற்கு முன்பு பல குற்றவாளிகளை ஒப்படைக்குமாறு ரஷ்யா கோரிக்கை விடுத்தபோதெல்லாம் அதைக் கண்டுகொள்ளவில்லை இங்கிலாந்து என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு செய்தித்தாளான ரோசியஸ்கயா கெசட்டாவில் வெளியான செய்தியில், கடந்த ஆறு ஆண்டுளில் 21 பேரை நாடு கடத்துமாறு இங்கிலாந்துக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்தது. ஆனால் ஒருவரைக் கூட இங்கிலாந்து, ரஷ்யாவிடம் ஒப்படைக்கவில்லை.
அவர்களில் பலர் கொலையாளிகள், பயங்கரவாதிகள், மோசடிப் பேர்வழிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்களில் 6 பேருக்கு இங்கிலாந்து அரசு, அரசியல் புகலிடமும் கொடுத்துள்ளது என்று காட்டமாக கூறியுள்ளது.
செச்னிய பிரிவினைவாத தலைவர் அகமது சகார்யேவ், பெரும் கோடீஸ்வரரான போரிஸ் பெரிஸோவ்ஸ்கி ஆகியோருக்கு இங்கிலாந்து அரசு அரசியல் புகலிடம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியதன் மூலம் இங்கிலாந்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் பெரிதாகியுள்ளது.












Click it and Unblock the Notifications