ஒகேனக்கல்லில் தடையை மீறி குளித்த 3 பேர் பலி!
ஒகேனக்கல்:மிக பயங்கர வேகத்தில் தண்ணீர் கொட்டி வரும் ஒகேனக்கல் அருவியில் தடையை மீறி குளிக்கச் சென்ற 3 சுற்றுலா பயணிகள் காவிரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் படு ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், பரிசல்களில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனி,ஞாயிற்றுகிழமைகளில் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு யாரையும் அருவியில் குளிக்கவிடாமல் போலீஸார் தடுத்தனர்.
ஆனாலும் போலீசாருக்குத் தெரியாமல் ஒகேனக்கல் அருவியில் குளிக்கச் சென்ற 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரகு (40), திருப்பூரைச் சேர்ந்த சின்னச்சாமி மற்றும் பெங்களூரைச் சேர்ந்த லட்சுமணன் (27) ஆகியோர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பலியாயினர்.
இவர்களுடன் சுற்றுலா வந்தவர்கள் போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, இவர்களது உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. இன்னும் இவர்களது உடல்கள் கிடைக்கவில்லை.
ஏரியூர், கொளத்தூர் பகுதிகளிலும் உடல்களை தேடும் பணி நடக்கிறது.
கூட்டாறு, சின்னமலை, ஊட்டமலை மற்றும் கர்நாடகத்தின் மாறுகொட்டாய் ஆகிய பகுதிகளிலும் காவிரியின் சிறிய அருவிகள் உள்ளன. இங்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் அத்துமீறி குளித்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும் இளைஞர்கள் புல் போதையை ஏற்றிக் கொண்டு வந்து அருவிகளில் குளிக்க முயன்று விபத்தில் சிக்குகின்றனர்.
இவர்களின் வற்புறுத்தலால் பரிசல் வைத்துள்ளவர்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு தடையை மீறி அழைத்து செல்வதாலும் விபத்துகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications