மந்திரவாதி கொலையில் மேலும் ஒருவர் சரண்!
சென்னை:சென்னையில் மந்திரவாதி ஷேக் பரீத் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் போலீஸில் சரணடைந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த மந்திரவாதி ஷேக்பரீத்(35) கள்ளக் காதல் பிரச்சனையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பந்தமான முக்கிய குற்றவாளிகள் இருவர் சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டனர்.
கொலையில் தொடர்புடையவர்கள் வரிசையாக சரணடைந்து வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன் எழும்பூர் கோர்ட்டில் பாஸ்கர், மாரி, ராஜா முகமது, மாரியப்பன் ஆகியோர் மாலையில் சரணடைந்தனர்.
சரணடைந்த இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆர்.கே.நகர் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மந்திரவாதியின் கள்ளக் காதலி ஷர்மிளா, முக்கிய கொலையாளியான தனது அண்ணன் இக்பால் இருக்கும் இடத்தை போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து அவரை போலீஸார் கைது செய்து ரகசியமாக வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
வாக்குமூலம் பெற்ற பின் இக்பால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் முக்கிய குற்றவாளியான சகாயம் என்ற சகாயராஜ் வக்கீல்கள் படை சூழ வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சகாயராஜ் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 9 வருடம் சிறை தண்டனை பெற்றவராம்.
இந்த கொலை வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற மெக்கானிக் முருகன், நைனார் முகம்மதுவின் (ஷர்மிளாவின் கணவர்) அண்ணன் ரகமத்துல்லா ஆகியோரை பிடிக்க மத்திய அரசின் உதவி நாடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications