சென்னையை ஆட்டிப் படைக்கும் ஆடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:மென்பொருள் நகரமாக மாறி வரும் சென்னை நகரில் ஆடி ராசி பலரையும் ஆட்டிப் படைக்கிறது. ஆனால் துணிக்கடை மற்றும் நகைக் கடை வியாபாரிகளுக்கு மட்டும் ஆடி மாதம் செமத்தியான வசூலை வாரிக் குவித்து வருகிறது.

பெங்களூரை மிஞ்சும் வேகத்தில் சென்னை நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களும், நிறுவனங்களும் படு வேகமாக காலூன்றி வருகின்றன. பெரிய பெரிய வளாகங்களில் கால் பதித்து வரும் ஐ.டி. நிறுவனங்களும், வணிக வளாகங்களும், கொந்தளிக்கும் அழகுடன் கூடிய திரையரங்க வளாகங்களும் வரிசை கட்டி பூத்துக் குலுங்கும் ஹை டெக் நகரமாக மாறியுள்ளது சென்னை.

இத்தனை ஹை டெக் ஐட்டங்களும், பழமை வாத நகர் என்ற பெயர் பெற்ற சென்னையின் முகவரியை மாற்றியுள்ள போதிலும் கூட காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சில விஷயங்களை மட்டும் இன்னும் மாற்றாமல், மாற்ற முடியாமல் அப்படியே தொடர வைத்து வருகிறது.

மாற்ற முடியாத விஷயங்களில் ஒன்றுதான் ஆடி மாதம். ஆடியில் எந்தக் நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது, குறிப்பாக கல்யாணமான பெண்கள் கர்ப்பமாகக் கூடாது என்ற நம்பிக்கையை தமிழகத்தின் பிற பகுதியினரைப் போல சென்னை நகரவாசிகளும் திட்டவட்டமாக கடைப்பிடிக்கிறார்கள்.

ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள்.

இந்த ஆடி மாத நம்பிக்கை காரணமாக கல்யாண மண்டபங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. புதிதாக மணமான பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்குப் போயுள்ளனர் (விரும்பாவிட்டாலும் கூட போய்த்தான் ஆக வேண்டும்)

ஆடியில் ஏன் கர்ப்பமாகக் கூடாது என்று கேட்டபோது, 56 வயதாகும் காமாட்சிப் பாட்டி கூறுகையில், ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம் என்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் அய்யம் பெருமாள் கூறுகையில், இது பொதுவான மத நம்பிக்கை. மற்றபடி ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும், அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை.

இதற்கும், அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

ஆடி இப்படி பொது மக்களைத்தான் பயமுறுத்துகிறதே தவிர நகைக் கடைக்காரர்களுக்கும், ஜவுளிக் கடைக்காரர்களுக்கும் ஆடி மாதம்தான் விசேஷமே.

ஆடித் தள்ளுபடி என்ற பெயரில் வியாபாரத்தை படு மும்முரமாக விருத்தி செய்து கொண்டுள்ளனர். இந்த ஆடித் தள்ளுபடிக்காக கலர் கலராக நடிகைகளையும், அழகுப் பெண்களையும் வைத்து விளம்பரங்கள் எடுத்து டிவிக்களிலும் எப்.எம். ரேடியோக்களிலும் ஆட விட்டும், பாட விட்டும் களேபரப்படுத்திக் கொண்டுள்ளனர்.

துணி, நகை என்று மட்டும் இல்லாமல் செருப்பு முதல் பல வகையான பொருட்களுக்கும் ஆடித் தள்ளுபடி கொடுத்து அசத்திக் கொண்டுள்ளனர் வியாபாரிகள்.

ஒன்று எடுத்தால் 2 இலவசம், 2 எடுத்தால் நாலு இலவசம் என்று கலக்கிக் கொண்டுள்ள வியாபாரிகளுக்கு ஆடி மாதம் கல்லாவை நிரப்ப பெரிதும் உதவியுள்ளது. ஆடி மாத மூட நம்பிக்கையை இவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றுதான் சொலல் வேண்டும்.

ஆடி மாதத் தள்ளுபடி விற்பனையின் பலனை அனுபவிக்க சென்னை நகரின் முக்கியப் பகுதியான தி.நகரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. தி.நகரின் பாண்டி பஜாரும், உஸ்மான் சாலையும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

ஒவ்வொரு நிறுவனத்திற்கு முன்பும் பிரமாண்ட பேனர்கள், விளம்பரப் பலகைகள் அலங்கரித்துள்ளன. பலர் கடையின் முகப்பையே ஆடித் தள்ளுபடிக்காக விதம் விதமாக மாற்றி அமைத்துள்ளனர்.

ஆனால் ஆடி மாத ராசியை திரையுலகினர் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். ஆடி மாதம் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை பலர் தள்ளி வைத்துள்ளனர். பள்ளிக்கூடம், உற்சாகம், ஓரம்போ, சொல்லி அடிப்பேன், அம்முவாகிய நான் ஆகியவை ஆடி மாதத்திற்குப் பிறகுதான் ரிலீஸாகவுள்ளன.

ஆனால் ஆடி ராசியை புறக்கணித்து விட்டு வீராப்பு, தீ நகர் ஆகிய படங்கள் ரிலீஸாகியுள்ளன.

மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு, குறிப்பாக அம்மன் பக்தர்களுக்கு ஆடி மாதம் வெகு விசேஷமானதாகும். தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத வைபவங்கள் களை கட்டியுள்ளன. பாட்டுக் கச்சேரி, பட்டிமன்றம் உள்ளிட்டவற்றுடன் ஆடி மாத விழாக்களை அம்மன் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல விவசாயிகளுக்கும் ஆடி மாதம் விசேஷமானதுதான். ஆடிப் பட்டம் தேடி விதை என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப தமிழகத்தின் கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடந்து வருகின்றன.

ஆடி மாதத்திலேயே விசேஷமான நாள் 18ம் தேதிதான். அன்று ஆடிப் பெருக்கு நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் விசேஷமாக கொண்டாடப்படவுள்ளது. புதுமணத் தம்பதிகள் அன்று பொங்கல் வைத்தும், படையல் வைத்தும் கொண்டாடுவர்.

தற்போது காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர் நிறைந்து ஓடி வருவதால் இந்த ஆண்டு ஆடிப் பெருக்கை உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+