சிக்கிமின் முதல் முதல்வர் டோர்ஜி மரணம்
கேங்டாக்:சிக்கிம் மாநிலத்தில் ஜனநாயகம் மலர பாடுபட்டவரும், சிக்கிம் இந்தியாவோடு இணைய பாடுபட்டவர்களில் முக்கியமானவரும், அம்மாநிலத்தின் முதலாவது முதலமைச்சருமான காஸி லெண்டப் டோர்ஜி கங்சர்பா 103 வயதில் இன்று மரணமடைந்தார்.
காலமான டோர்ஜிக்கு வயது 103. கிழக்கு சிக்கிமில் 1904ம் ஆண்டு பிறந்தவர் டோர்ஜி. லாமா வம்சத்தில் வந்தவரான டோர்ஜி, தனது 6வது வயதில், ரம்டக் லாமா பிரிவின் தலைவர் ஆனார்.
1945ம் ஆண்டு சிக்கிம் மக்கள் மண்டல் என்ற கட்சியை ஆரம்பித்தார் டோர்ஜி. அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சிக்கிம் இந்தியாவுடன் இணைந்திருக்கவில்லை. 1953ம் ஆண்டு சிக்கிம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் டோர்ஜி. 1958ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்.
பின்னர் காஸி சிக்கிம் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை 1962ம் ஆண்டு தொடங்கினார். சிக்கிம் மக்களுக்கு அமைதி, வளம், முன்னேற்றத்தை ஏற்படுத்தும் லட்சியத்துடன் இந்தக் கட்சியை ஆரம்பித்தார் டோர்ஜி.
இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிக்கிமின் அரசியல் சூழ்நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. 3வது சிக்கிம் பொதுத் தேர்தலில் டோர்ஜியின் கட்சி வெற்றி பெற்றது. 1970ல் நடந்த 4வது பொதுத் தேர்தலிலும் இவரது கட்சியே வென்றது. சிக்கிம் மாநிலத்தின் எக்சிகியூட்டிவ் கவுன்சிலராக நியமிக்கப்பட்டார் டோர்ஜி.
1974ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி டோர்ஜி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது. சிக்கிம் அரண்மனையில் இந்த பதவியேற்பு நடந்தது.
அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களில் டோர்ஜியின் சிக்கிம் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்டது. 1975ம் ஆண்டு இந்தியாவின் 22வது மாநிலமாக இணைந்தது சிக்கிம். டோர்ஜியின் கட்சியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது.
காஸி சிக்கிம் முதல்வராக இருந்த காலத்தில்தான் சிக்கிம் மாநிலத்தில் ஜனநாயகம் மலர்ந்தது. அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியும் அபரிமிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த டோர்ஜிக்கு வயது 103. பத்மவிபூஷன், சிக்கிம் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications