சென்னை to
நெல்லை:சென்னையிலிருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இனி வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தென்காசிக்கு வாரத்தில் 2 நாட்கள் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பின் வாரத்தில் 3 முறையாகவும், பின்னர் வாரத்தில் 5 முறையாகவும் இயக்கப்பட்ட இந்த ரயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டன.
தற்போது தென்னக ரயில்வேயிலேயே அதிக வருமானம் தரும் ரயிலாக பொதிகை எக்ஸ்பிரஸ் மாறியுள்ளது. மேலும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிவதால் இப்பகுதி மக்கள் வாரத்தில் 7 நாட்களும் ரயிலை இயக்க கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி - செங்கோட்டை இடையே 7 கி.மீ தொலைவிலான மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்பு இந்த ரயில் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்திருந்தார்.
தற்போது இப்பபணிகள் முடிந்து விட்டன. ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு ரயில் பாதையில் போக்குவரத்தை தொடங்கலாம் என சான்று தர வேண்டும். ஆனால் இன்னும் அந்த சோதனை நடைபெறாததால் இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படாமல் பல மாதமாக தாமதம் ஏற்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் மாதம் தென்காசி - திருநெல்வேலி இடையிலான மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி தொடங்கவுள்ளது. அதே சமயம் திருநெல்வேலி-திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்குகிறது.
மேலூர் புனலூர்-கொல்லம் இடையே 53 கிலோமீட்டர் அகல ரயில் பாதை பணி முடிந்து அங்கும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ஆனால் செங்கோட்டை-புனலூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை மாற்றிட ஆய்வுகள் நடப்பதாக கூறப்படுகிறது.
தற்போது 18 பெட்டிகளோடு மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயிலை 110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கவும், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுற்றுலா பயணிகள், பொது மக்கள், வியாபாரிகள் கோரி வருகின்றனர்.
இந் நிலையில், பொதிகை ரயில் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால் இப்பகுதி மக்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பொதிகை ரயில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பொதிகை ரயில் விவகாரத்தில் தென்காசி தொகுதி எம்.பி. அப்பாத்துரையை விட, சிவகாசி தொகுதி மதிமுக எம்.பியான சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்தான் அதிக அக்கறை செலுத்துகிறார். விருதுநகர்-கொல்லம் அகல ரயில் பாதை திட்டத்திற்கு போராடியவர் வைகோ என்பதே இதற்குக் காரணம்.












Click it and Unblock the Notifications