ஹார்முஸ் ஜலசந்தியில்.. ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரான் அட்டாக்.. இந்தியர் ஒருவர் பலி!
துபாய்: ஹார்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி ஏந்திய இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் பலியானார்.
சர்வதேச அளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தாக்குதல்கள் உச்சம் அடைந்து உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி ஏந்திய இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கோர சம்பவத்தில் கப்பலில் பணியிலிருந்த இந்திய ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும் 6 இந்தியர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர் பதற்றத்தை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது.
ஓமன் கடல் பகுதியில் நடந்த தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஓமன் நாட்டின் கடல் எல்லைக்குட்பட்ட ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. Mombasa மற்றும் Bahia ஆகிய இரண்டு அமீரக தேசிய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரான் ராணுவம் செலுத்திய அதிநவீன க்ரூஸ் ஏவுகணைகள் இந்த இரண்டு கப்பல்களையும் தாக்கின. ஏவுகணை தாக்கிய அடுத்த சில நிமிடங்களில் இரண்டு கப்பல்களிலும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் கப்பல் ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தியர்கள் பாதிப்பு: விவரங்கள் வெளியீடு
இந்த கொடூரமான தாக்குதலில், 'மொம்பாசா' கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்ற 8 ஊழியர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் இந்தியர்கள் என்றும், 2 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த மற்றும் காயமடைந்த இந்தியர்களின் குடும்பங்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஈரான் அட்டாக்
இதற்கிடையில், இந்த தாக்குதல் குறித்து ஈரான் நாட்டின் அரசு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஹார்முஸ் நீரிணை வழியாக சட்டவிரோதமான முறையில் பயணிக்க முயன்ற இரண்டு கப்பல்களை எச்சரிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அமீரகத் தரப்போ இது எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு அல்ல என்றும், திட்டமிட்டு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இதே பகுதியில் அமெரிக்காவின் அதிநவீன MQ-1 ரக ட்ரோன் விமானத்தையும் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் புரட்சிகர காவல்படை கூறி உள்ளது.
இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நேரடி மோதல் சூழலும் தீவிரமடைந்துள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. "இது சர்வதேச கடல் சட்டங்களை முற்றிலும் மீறும் செயலாகும். இந்த மத்திய கிழக்கின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்" என்று அமீரக அரசு விமர்சனம் செய்துள்ளது. .
மேலும், இந்த அத்துமீறலுக்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
