ஆகஸ்ட் 29ல் கட்சி பெயர்-கொடி அறிவிப்பு: சரத்
சென்னை:தனது புதிய கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விவரங்களை ஆகஸ்ட் 29ம் தேதி அறிவிக்கவுள்ளதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஆணித்தரமாக எழுதப்பட்டு விட்ட ஒன்று. அதை இன்று வரை தமிழ் திரையுலகம் நிரூபித்து வருகிறது.
தமிழக அரசியலில் லேட்டஸ்டாக அரசியலில் குதித்து சாதித்துக் காட்டியவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி ஒரு வருடத்திற்குள்ளாகவே மக்கள் செல்வாக்கை சம்பாதித்து அசத்தியுள்ளார் விஜயகாந்த்.
ஆனால் அவரைத் தொடர்ந்து அரசியலுக்கு வந்த கார்த்திக், என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஏசி அறையிலேயே வாழ்ந்து விட்ட கார்த்திக்கால், காடு, மலை ஏறி பிரசாரம் செய்ய முடியவில்லை, ஊர் சுற்றி மக்களை சந்திக்க உடல் நலம் ஒத்து வரவில்லை. இதனால் ஓரமாக ஒதுங்கிக் கொண்டு விட்டார்.
![]() |
இந் நிலையில் அடுத்த நடிகராக சரத்குமார் அரசியல் களத்தில் குதிக்கிறார். நாடார் சமுதாயத்தினரின் சமூக-பத்திரிக்கைகள் பக்க பலத்துடன் அரசியலுக்கு வரும் சரத்குமார், அனைத்து சாதியினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக தனது புதிய கட்சி இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்ட விவரங்களை வருகிற 29ம் தேதி அறிவிக்கவுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆகஸ்ட் 29ம் தேதி எனது கட்சியின் பெயர், கொடி, கொள்கை, கோட்பாடுகளை அறிவிக்கவுள்ளேன். மேலும் எங்கு, எப்போது கட்சி தொடங்கப்படும் என்பதையும் அறிவிக்கவுள்ளேன். அக்டோபரில் கட்சி தொடங்கப்படும்.
தொடர்ந்து நடிப்பேன்:
போராட்டம் நடத்த நாங்கள் கட்சி தொடங்கவில்லை. எந்தப் பிரச்சினைக்கும் போராட்டம் நடத்தாமலேயே அகிம்சை முறையில் தீர்வு காண்போம்.
கட்சி தொடங்கிய பின்னர் நான் சினிமாவை விட்டு விட மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன் என்றார் சரத்குமார்.
டாடா தொழிற்சாலை:
பின்னர் டாடா நிறுவனம் அமைக்கவுள்ள டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனம் குறித்து மக்களின் கருத்தறிய தான் அனுப்பிய குழுவினர் கண்டறிந்துள்ள விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சரத்குமார்.
அதுகுறித்து சரத் கூறுகையில், இந்தத் திட்டத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டம் அமையவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களில் 70 சதவீதம் பேர் எதிர்க்கிறார்கள். எனவே இந்தத் திட்டத்திற்கு இப்பகுதி மக்களிடையே வரவேற்பில்லை என்று தெரிகிறது.
சரத்குமார் நற்பணி மன்றம் சார்பில் மொத்தம் 5 குழுக்கள் அனுப்பப்பட்டன. இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்துக் கருத்து கேட்டுள்ளனர்.
அரசியல் ஆதாயத்திற்காக இந்த உண்மை கண்டறியும் ஆய்வை நாங்கள் நடத்தவில்லை. அதற்கு எங்களுக்கு அவசியமும் இல்லை. சமூக நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த ஆய்வை நடத்தினோம்.
அரசு சார்பில் இப்பகுதிகளுக்கு குழு அனுப்பப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அதேசமயம், இந்தக் குழுக்கள் மக்களை பயமுறுத்தி கருத்து கேட்கக் கூடாது. அரசு குழு அளிக்கும் அறிக்கை எங்களது குழுக்கள் அளித்துள்ள அறிக்கைக்காக மாறாக இருந்தால் நாங்கள் மீண்டும் மக்களிடம் செல்வோம்.
டாடா நிறுவனத்தின் தொழிற்சாலையால் வீடு, நிலம் பறிபோகும் என மக்கள் அஞ்சுகின்றனர். வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. கிட்டத்தட்ட 18 ஆயிரத்து 300 குடும்பங்கள் நிலத்தை, வீடுகளை இழக்கும்போது எப்படி அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பினை தர முடியும்.
பல்டி ஜெயலலிதா:
இந்தத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது கடுமையாக எதிர்க்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு கேலிக்குரியதாக உள்ளது. அவர் ஆட்சியில் இருந்தபோதே இந்தத் திட்டத்தை ரத்து செய்திருக்கலாமே. அதை ஏன் அவர் செய்யவில்லை.
முன்பு ஹெல்மட் கட்டாயம் என்று கூறினார்கள். அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த சட்டத்தை விட்டு விட்டார்கள். அது போலவே இந்தத் திட்டத்தையும் அரசு விட வேண்டும் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கருதுகிறார்கள்.
வைகுண்டராஜனுக்கு ஆதரவு:
அதேசமயம், குறிப்பிட்ட ஒருவரே (ஜெயா டிவி பங்குதாரர் வைகுண்டராஜன் - இவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்) இப்பகுதியில் உள்ள கணிம வளத்தை சுரண்டுவதாக கூறப்படும் புகார் குறித்து மக்கள் எங்களிடம் எந்த எதிர்ப்பையும், புகாரையும், குற்றச்சாட்டையும் அளிக்கவில்லை.
எங்களது அறிக்கை மற்றும் வீடியோ பிரதிகளை முதல்வருக்கு அனுப்பவுள்ளோம் என்றார் சரத்குமார்.













Click it and Unblock the Notifications