For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளை ரவியை வீழ்த்திய ஜாங்கிட் படை!

By Staff
Google Oneindia Tamil News

ஓசூர்:ஓசூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவி, ஓசூர் முன்னாள் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ வெங்கடசாமியை கடத்திப் பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அவனது உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சென்னை வியாசர்பாடி, சஞ்சய் நகரைச் ேசர்ந்தவன் வெள்ளை ரவி. அவனுக்கு வயது 39. 8வது வரை படித்தவன்.

23வது வயதில் ரவுடித்தனத்தை ஆரம்பித்தான் ரவி. ஒரு அடிதடி வழக்கில் முதல் முறையாக ரவி மீது 1991ம் ஆண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் வட சென்னையின் பிரபல ரவுடியாக மாறினான் ரவி. அவனுக்கென்று ஒரு கூட்டம் சேர்ந்தது. அதில் 12 குட்டி ரவுடிகள் இடம் பெற்றிருந்தனர். ஏற்கனவே ரவி என்ற பெயரில் பிரபல ரவுடி இருந்ததால் தனது பெயரை வெள்ளை ரவி என்று மாற்றிக் கொண்டான்.

Vellai Ravi

கடந்த 15 ஆண்டுகளாக கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொலைல முயற்சி உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான்.

அரசியல்வாதிகள் சிலரும், கால்துறை அதிகாரிகள் பலரும் ரவிக்கு மறைமுக ஆதரவு கொடுத்ததால், அவனது சட்ட விரோத ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தது.

தென் சென்னையில் வீரமணி கலக்கி வந்ததைப் போல வட சென்னையை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு அப்பகுதி மக்களை நித்யகண்டம் பூரணாயுசு போல பயங்கர பதட்டத்திலேயே வைத்திருந்தான்.

Vellai Ravi

ரவி மீது 14 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 7 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான் ரவி. ஆனால் அத்தனை முறையும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறையிலிருந்து வெளியே வந்து விட்டான்.

வட சென்னைப் பகுதியில் வெள்ளை ரவிக்குப் போட்டியாக இருந்தவன் சேரா. இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இதனால் வட சென்னை எப்போதுமே பதட்டமாகவே இருக்கும்.

கடந்த 2001ம் ஆண்டு வெள்ளை ரவி தனது ரவுடித்தனத்தை விட்டு விடுவதாக அறிவித்தான். சொன்னதோடு நிற்காமல் சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் சுயேச்சையாகவும் போட்டியிட்டான். அதில் 2,702 வாக்குகள் அவனுக்குக் கிடைத்தது.

Jhankit

அதன் பின்னர் சில காலம் அமைதியாக இருந்து வந்தான். ஆனால் சில மாதங்களிலேயே தனது ரவுடித்தனத்தை மீண்டும் ஆரம்பித்தான். இதையடுத்து ரவியைப் பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர். இதை அறிந்த அவன் மனைவியின் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் ரெய்ச்சூருக்கு போய் விட்டான்.

அங்கு போன பின்னர் ரவியின் சட்டவிரோத செயல்கள் சில மாதங்களாக இல்லாமல் இருந்தது. ஆனால் மீண்டும் சென்னைக்குத் திரும்பிய வெள்ளை ரவி, தனது சேட்டைகளை ஆரம்பித்தான்.

பம்மலைச் சேர்ந்த பாமக பிரமுகரான தொழிலதிபர் ராஜ்குமார் என்பவரைக் கடத்திச் சென்றான். ரூ. 1 கோடி பணம் கொடுத்தால் ராஜ்குமாரை விடுதலை செய்வதாக அவரது குடும்பத்தினரை மிரட்டினான். கொலை செய்வதாக மிரட்டி ரூ. 60 லட்சம் பணத்தைக் கறந்தான்.

ரவி கும்பல் ஏமாந்த சமயமாகப் பார்த்து ராஜ்குமார் அவனது பிடியிலிருந்து தப்பி வந்தார். அதன் பின்னர் போலீஸில் அவர் புகார் கொடுத்தார்.

இந்த முறை ரவியை விட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸார் ரவியைப் பிடிக்க வலை விரித்தனர். ஆனால் அதிலிருந்து தப்பிய ரவி ஆந்திராவுக்கு ஓடினான்.

அவனைப் பிடிக்க அங்கு தனிப்படை போலீஸார் விரைந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் அவன் சிக்கவில்லை. கர்நாடகத்திற்கும் போலீஸ் படை விரைந்தது. அங்கும் அவன் சிக்கவில்லை.

கதையை முடித்த ஜாங்கிட்

இந் நிலையில், நேற்று இரவு ரவி ஓசூர் பக்கம் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையில் போலீஸ் படை அங்கு விரைந்தது.

ஓசூர் அருகே உள்ள ரிசார்ட்டில் ரவி தனது கும்பலுடன் தங்கியிருந்தான். அங்கு போலீஸ் படை சென்றது. போலீஸாரைப் பார்த்ததும் ரவியும், அவனது கூட்டாளிகளும் டாடா சுமோ கார்களில் தப்பிச் சென்றனர்.

பாகலூர் என்ற இடத்தில் ரவி கும்பலை மறித்தது போலீஸ் படை. ஆனால் அவர்கள் மீது ரவி கும்பல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து போலீஸார் சரமாரியாக சுட்டதில் ரவி கொல்லப்பட்டான். கூட்டாளி குணாவும் குண்டு பாய்ந்து இறந்தான். 5 கூட்டாளிகள் தப்பி விட்டனர்.

அயோத்தியா குப்பம் வீரமணி, பங்க் குமார், கபிலன், நாகூர் மீரான் உள்ளிட்ட அமைதிப்படுத்தப்பட்ட ரவுடிகளில் பட்டியலில் தற்போது வெள்ளை ரவியும் இணைந்துள்ளான். இதன் மூலம் வட சென்னையைக் கலக்கி வந்த ஒரு சமூக விரோதியின் அட்டகாசம் முடிவுக்கு வந்துள்ளது.

வீழ்ந்தது எப்படி?

வெள்ளை ரவியை சுட்டு வீழ்த்திய தனிப்படைக்குத் தலைமை தாங்கி இந்த வேட்டையை வெற்றிகரமாக முடித்திருப்பவர் ஜாங்கிட். தமிழக காவல்துறையில் உள்ள அதிரடியான அதிகாரிகளில் முக்கியமானவர். இவர் பதவி வகித்த இடங்களில் எல்லாம் தாதாக்களும், கள்ளச்சாராய வியாபாரிகளும் அடக்கி ஒடுக்கி இருந்த இடமே இல்லாமல் போயுள்ளனர்.

அந்த அளவுக்கு இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை அடகுக்குவதில் கில்லாடி அதிகாரி ஜாங்கிட். இவரது மேற்பார்வையில் நடந்த நடவடிக்கையில்தான் தற்போது வெள்ளை ரவி வீழ்ந்துள்ளான்.

இதற்கு முன்பு பங்க் குமார் போட்டுத் தள்ளப்பட்டதும் ஜாங்கிட் மேற்பார்வையிலான படையினர்தான் என்பது நினைவிருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் சென்னையைக் கலக்கி வந்த வட நாட்டு கொள்ளைக் கும்பலையும் உத்தரப் பிரதேசத்தில் போய் எண்கெண்டரில் காலி செய்தவர் ஜாங்கிட்தான்.

வெள்ளை ரவியையும், அவனது கூட்டாளியையும் ஜாங்கிட் தலைமையிலான படை வீழ்த்தியது குறித்து சென்னையில் பதவி மாறிச் செல்லும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறுகையில், கடந்த 16 வருடங்களாக சென்னையில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தவன் வெள்ளை ரவி.

கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். 1991ம் ஆண்டு தனது ரவுடித் தொழிலை தொடங்கினான். கடைசியாக கடந்த மே மாதம் 22ம் தேதி சென்னை தொழிலதிபர் ராஜ்குமாரை கடத்திக் கொண்டு போய் வைத்துக் கொண்டு ரூ. 2 கோடி பணம் கேட்டான்.

இந்த வழக்கு தொடர்பாக அவனைத் தீவிரமாக தேடி வந்தோம். துணை ஆணையர் சம்பத்குமார் தலைமையில் ஒரு படையும், உதவி ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் இன்னொரு படையும் வெள்ளை ரவியைத் தேடி வந்தனர்.

போலீஸாரின் கெடுபிடி காரணமாக ஆந்திராவுக்கும், கர்நாடகத்திற்கும் பதுங்கிப் பதுங்கி வசித்து வந்தான் ரவி. இவனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக பெங்களூரிலேயே ஒரு தனிப்படை நிரந்தரமாக தங்கி ரவியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தது.

இந்த நிலையில்தான் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கிடசாமியை கடத்திச் சென்று ரூ. 1.50 கோடி பணம் பறிக்க ரவியும், அவனது கூட்டாளிகளும் திட்டமிட்டிருந்த தகவல் பெங்களூர் தனிப்படைக்குக் கிடைத்தது.

இதையடுத்து சென்னையிலிருந்து ஜாங்கிட் ஓசூர் விரைந்தார். அவரும் பிற அதிகாரிகளும் மாறுவேடத்தில் பாகலூர் வனப் பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது இரு டாடா சுமோ கார்களில் ரவியும், கூட்டாளிகளும் அந்த சாலை வழியாக வந்தனர்.

அவர்களை போலீஸ் படை வளைத்தது. ஆனால் அந்தக் கார்கள் அங்கிருந்து தப்பி வேகமாக செல்லத் தொடங்கின. இதையடுத்து போலீஸாரும் அந்தக் கார்களை துரத்திச் சென்றனர்.

அப்போது அந்தக் கும்பல் போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் உதவி ஆணையர் ஜெயக்குமாருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் பிரதீப், தில்லை நடராஜன் ஆகியோரும் தீக்காயமடைந்தனர்.

இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக துப்பாக்கிகளால் சுட்டனர். நீண்ட நேரம் இந்த சண்டை நடந்தது. இதில் ரவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தான். குணா என்பவனுக்கும் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடினான். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர்.

உடனடியாக ரவியையும், குணாவையும் ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குணாவும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான் என்றார்.

உடல் இன்று தாயாரிடம் ஒப்படைப்பு

ரவியின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னர் அவனது தாயாரிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

வெள்ளை ரவி மற்றும் குணாவின் உடல்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஜாங்கிட் அங்கேயே முகாமிட்டுள்ளார்.

ரவி மற்றும் குணாவின் உடல்கள் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

ரவியின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவனது தாயார் முனியம்மாள், மூத்த சகோதரி வாசுகி மற்றும் ரவியின் வழக்கறிஞர் ஆகியோர் ஓசூர் வந்துள்ளனர். இன்று பிற்பகல் வாக்கில் அவர்களிடம் ரவியின் உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

பிரேதப் பரிசோதனையை வீடியோவில் படமெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குணாவின் உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாததால் அவனது உடலை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் வைத்திருக்க போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

மனைவியை மிரட்டி மணந்தவன்

வெள்ளை ரவியின் மனைவி கமலா கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்தவர். அவரது தந்தை அப்பகுதியில் பிரபலமான காங்கிரஸ் பிரமுகர். கமலாவை மிரட்டித்தான் மணந்தான் ரவி.

இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். மகள் பாக்கியலட்சுமி ஊட்டி கான்வென்ட்டில் 3வது வகுப்பு படித்து வருகிறாராம்.

வெள்ளை ரவி பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளமாட்டானாம். சென்னையில் தொடர்ந்து ரெளடியிசத்தில் ஈடுபட்டு வந்த வெள்ளை ரவிக்கு, சானியா என்ற சினிமா துணை நடிகையின் பழக்கம் ஏற்பட்டு அவரை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டான்.

ரவிக்கு சினிமா ஆசையும் இடையில் வந்தது. தெலுங்குப் படத்தில் நடிக்க முயற்சித்து வந்தான். ஆனால் அது நிறைவேறவில்லை. 1998ம் ஆண்டு புரட்சி பாரதம் என்ற கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளரானான். பின்னர் 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றான்.

ஒருமுறை சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போது, உடல்நிலை சரியில்லை என்று கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தான். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரை கவனித்து விட்டு சுதந்திரமாக இரவு நேரத்தில் வெளியில் சென்று ரெளடித்தனத்தில் ஈடுபட்டு வந்தான்

இது தவிர போதைப் பொருள் கடத்தல், மரக் கடத்தல் என சகல வித சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தான் ரவி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X