மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தினார் சானியா
கார்சன் (கலிபோர்னியா):கலிபோர்னியாவின் கார்சன் நகரில் நடந்து வரும் ஈஸ்ட் வெஸ்ட் பாங்க் கிளாசிக் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்று ஆட்டத்தில், முன்னணி வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்தியாவின் சானியா மிர்ஸா.
அமெரிக்காவில் மையமிட்டுள்ள சானியா தனது புயல் வேக வெற்றிகளால் அமெரிக்க டென்னிஸ் அரங்கை கலகலக்க வைத்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இரு தொடர்களில் அவர் சிறப்பாக விளையாடினார்.இந்தத் தொடர் வெற்றிகளால், டென்னிஸ் ரேங்கிங்கில் 30வது இடத்துக்கு உயர்ந்துள்ளார் சானியா.
இந்த நிலையில் தற்போது ஈஸ்ட் வெஸ்ட் பாங்க் கிளாசிக் டென்னிஸ் தொடரில் அவர் ஆடி வருகிறார்.
இதன் 2வது சுற்று ஆட்டத்தில் உலகளவில் 12வது இடத்தில் உள்ள மார்ட்டினா ஹிங்கிஸை சந்தித்தார் சானியா.
இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய சானியா 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஹிங்கிஸை வீழ்த்தி அசத்தினார்.
தனது முதல் சுற்றில் அலெசாண்ட்ரா உஸ்னியாக்கை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தியிருந்தார் சானியா.
ஹிங்கிஸை சானியா வீழ்த்தியிருப்பது அவரது டென்னிஸ் வாழ்க்கையில் முக்கியமான மைல் கல்லாகும்.
இரட்டையர் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சானியாவும், அவருடன் முதல் முறையாக பார்ட்னராக இணையும் அமெரிக்காவின் பெத்தானி மாட்டக்கும், ஜேனட் ஹுசரோவா - மைக்கேல்லா கிராஜியெக் இணையுடன் மோதவுள்ளனர்.


Click it and Unblock the Notifications
