து.ஜனாதிபதி தேர்தல் முடிந்தது-ஹமீத் வெற்றி உறுதி
டெல்லி:நாட்டின் 13வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்காலம் வருகிற 15ம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற, குடியரசுத் துணைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். எனவே அப்பதவி தற்போது காலியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று தேர்தல் நடந்தது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள் வாக்களித்தனர்.
இரு அவைகளிலும் சேர்த்து மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 784 ஆகும். இதில் 4 பேர் வெளிநாட்டு பயணத்தில் உள்ளனர்.
காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி சார்பில் முகம்மது ஹமீத் அன்சாரியும், பாஜக கூட்டணி சார்பில் நஜ்மா ஹெப்துல்லாவும், மூன்றாவது அணியின் சார்பில் ரஸீத் மசூத்தும் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை வாக்கெடுப்பு தொடங்கியதும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். வாக்குப் பதிவு 2 மணி நேரத்தில் 672 எம்பிக்கள் வாக்களித்துவிட்டனர்.
மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.
வாக்கு எண்ணிக்கை இன்றே நடந்து முடிவு அறிவிக்கப்படும்.
நாளை புதிய குடியரசுத் துணைத் தலைவர் பதவியேற்பார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:
இந் நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு அவைகளும் வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications